சாலையை அகலப்படுத்தக்கோரி மறியல் போராட்டம். 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
விபத்துகள் அதிகரிப்பதால் சாலையை அகலப்படுத்தக்கோரி ஜவ்வாதுமலை சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாணியம்பாடி
விபத்துகள் அதிகரிப்பதால் சாலையை அகலப்படுத்தக்கோரி ஜவ்வாதுமலை சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதிய சாலை அமைப்பு
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த ஆர்.எம்.எஸ். புதூர் பகுதியிலிருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய, வனத்துறைக்கு சொந்தமான 9 அடி அகல மலைசாலை, பராமரிப்பு பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியிலிருந்து ஜமுனாமரத்தூர், போளூர், திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த மலைசாலை பயன்படுகிறது. காவலூரில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இந்த சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 6 பேர் இந்த பகுதியில் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர். மேலும் 2 வாகனங்கள் நேருக்கு நேர் சந்திக்கும் போது சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சாலையை அகலப்படுத்தி தரவேண்டுமென்று அப்பகுதி மக்கள் பலஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த வாரம் பழைய சாலை மீது புதிய தார்சாலை போடப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்கள் மறியல்
இதனால், சாலையின் உயரம் 2 அடிக்கும் மேல் உயர்ந்து விட்டதால், பெரிய வாகனங்கள் வரும்போது எதிரே வரும் இரு சக்கர வாகனங்கள் ஒதுங்க முயலும்போது, கீழே விழுந்து விபத்தில் காயமடைவதால் பக்கவாட்டில் உள்ள சாலையை அகலப்படுத்த கோரிக்கை வைத்திருந்தனர். நேற்று சாலையை அகலப்படுத்த வந்திருந்த மாநில நெடுஞ்சாலை துறையினரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட மலை கிராமத்தை சேர்ந்த சுமார் 500- க்கும் மேற்பட்டவர்கள் ஆர்.எம்.எஸ். புதூர் பகுதியில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மலைக்கு செல்லும் வாகனங்களும், மலையிலிருந்து கீழே இறங்கும் வாகனங்களும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரிசை கட்டி நின்றன.
7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தகவலறிந்து வந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராஜ், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி, மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா, நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் சாலையை சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொங்கவிட்டால் சாலை மறியலை கைவிட மாட்டோம் என கிராம மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் சாலையை அகலப்படுத்த ஒரு வாரம் கால அவகாசம் கேட்டு மலைவாழ் மக்களை போராட்டத்தை கைவிட்டு கலைத்தனர். இந்த மறியலால் சுமார் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story