குடியாத்தம் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்


குடியாத்தம் அருகே  சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Feb 2022 12:21 AM IST (Updated: 9 Feb 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுடுகாடு ஆக்கிரமிப்பு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம் மோடிக்குப்பம் ஊராட்சி ஆர்.கொல்லப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொல்லப்பல்லி ஆற்றோரம் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தில் இறந்தவர்களின் உடல்களை பல ஆண்டுகளாக அடக்கம் செய்து வந்தனர்.

அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக கூறியும் அந்த இடத்தை மீட்டுத்தரக் கோரியும் நேற்று காலையில் குடியாத்தம்-பலமநேர் சாலையில் ஆர்.கொல்லப்பல்லி பஸ் நிறுத்தம் அருகே ஆண்களும், பெண்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர்.

சாலை மறியல்

அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, மண்டல துணை தாசில்தார் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் காந்தி உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து சுமார் 45 நிமிடங்களாக நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக குடியாத்தம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் வாகனங்கள் வழியில் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலை மறியல் சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் காந்தி குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story