பொதுப்பிரிவில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி


பொதுப்பிரிவில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி
x
தினத்தந்தி 9 Feb 2022 12:51 AM IST (Updated: 9 Feb 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு பொதுப்பிரிவில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது.

திருச்சி, பிப்.9-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு பொதுப்பிரிவில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது.
மருத்துவ படிப்புகளுக்கு
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கு நீட் தேர்வில் தேர்வானவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 27-ந் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக சிறப்பு ஒதுக்கீடு மற்றும் அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு உடனடியாக உரிய கல்லூரிகளில் சேர்க்கை பணி தொடங்கியது. இதனை தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்-லைன் முறையில் நடத்தப்பட்டது.
அரசு கல்லூரிகளில் 3,995 எம்.பி.பி.எஸ். இடங்கள், 157 பி.டி.எஸ்., இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீடான 1,390 எம்.பி.பி.எஸ்., 1,166 பி.டி.எஸ்., இடங்களுக்கும் ஆன்-லைனில் கலந்தாய்வு நடந்தது. இதன்மூலம் 9 ஆயிரத்து 723 பேர் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்களை தேர்வு செய்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி அரசு மருத்துவக் கல்லூரிகளில் நேற்று முதல் தொடங்கியது.
சான்றிதழ் சரிபார்ப்பு
திருச்சியில் பெரிய மிளகுபாறை பகுதியிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்புபணி நேற்று காலை முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த பணியில் டீன் வனிதா தலைமையில் டாக்டர்கள் ஆனந்தி, ஜேனட் உள்பட 10-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று 100 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) 100 பேர், நாளை (வியாழக்கிழமை) 100 பேர் என மொத்தம் 300 மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது.
இதையடுத்து வரும் 15-ந் தேதி மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். 16-ந் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 17-ந் தேதி முதல் 22-ந் தேதி மாலை 3 மணி வரை அவர்கள் தேர்வான கல்லூரிகளில் சேர்ந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Next Story