குக்கர்கள் உள்பட ரூ.52 ஆயிரம் பொருட்கள் பறிமுதல்; மதுபாட்டில்களும் சிக்கின
குக்கர்கள் உள்பட ரூ.52 ஆயிரம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொரு சோதனையில் மதுபாட்டில்கள் சிக்கின.
பெரம்பலூர்:
பொருட்கள் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பணம், பொருட்களை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குரும்பலூரை அடுத்த ஈச்சம்பட்டி அருகே முத்திரைத்தாள் தனி தாசில்தார் பழனிசெல்வன் தலைமையில் போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் நேற்று காலை பெரம்பலூர்-துறையூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெரம்பலூர் செக்கடித்தெருவை சேர்ந்த குணசீலன்(வயது 42) என்பவர் தனது காரில் நேற்று காலை துறையூருக்கு சென்று கொண்டிருந்தார். அவரது காரை பறக்கும்படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் குக்கர்கள், சமையல் உபகரணங்கள், எலக்ட்ரானிக் கருவிகள், காய்கறிகள் நறுக்கும் உபகரணங்கள் உள்பட ரூ.52 ஆயிரத்து 45 மதிப்புள்ள பொருட்கள் இருந்தன. இது பற்றி பறக்கும் படையினர் விசாரித்தபோது, அவற்றை ஒரு விழாவிற்காக எடுத்து செல்வதாக குணசீலன் கூறியுள்ளார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் பறக்கும் படையினர் அந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
இதேபோல் லெப்பைக்குடிகாட்டில் இருந்து பெண்ணகோணம் செல்லும் சாலையில் தனி தாசில்தார் துரைராஜ் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மதுபாட்டில்களை எடுத்து சென்றதாக தெரிகிறது. தேர்தல் பறக்கும் படையினரை பார்த்தவுடன் அவர்கள் வைத்திருந்த மதுபாட்டில்கள் இருந்த சாக்கு மூட்டையை அங்கயே போட்டுவிட்டு தப்பி தப்பியோடினர். இதையடுத்து மூட்டையில் இருந்த 39 மது பாட்டில்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ்கிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story