சிண்டிகேட் உறுப்பினர்களாக 3 பேர் செயல்பட விதித்த தடை நீக்கம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்களாக 3 பேர் செயல்பட விதித்த தடை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்களாக 3 பேர் செயல்பட விதித்த தடை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அறிக்கை தாக்கல்
மதுரையை சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தகுதியற்ற பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இது தொடர்பாக உயர்மட்ட குழுவை அமைத்து விசாரிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையிலான உயர்மட்ட குழு, விசாரணை செய்து இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணைவேந்தருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்வுக்கு தடை விதித்தும், உயர்மட்ட குழுவின் இறுதி அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, பதவி உயர்வு பெற்று சிண்டிகேட் உறுப்பினர்களாக இருந்த 3 பேரை அப்பதவியில் செயல்பட தடைவிதித்து உத்தரவிட்டது.
தடை நீக்கம்
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது எதிர்தரப்பு சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி, காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் பணி நியமன நடவடிக்கைகள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பேரில் அறிக்கை தயாரித்து தாக்கல் செய்யப்பட்டு, அந்த அறிக்கையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, இதுதொடர்பான பிரதான வழக்கை தள்ளுபடி செய்தது. அதனடிப்படையில் மேற்கண்ட 3 பேர் சிண்டிகேட் உறுப்பினர்களாக செயல்பட விதித்த தடையை நீக்கி, இந்த மனுவையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில் நீதிபதிகள், சிண்டிகேட் உறுப்பினர்களாக 3 பேர் செயல்பட விதித்த தடை நீக்கப்படுகிறது.
இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story