நம்பியூர் அருகே 6-வது நாளாக சிறுத்தையை தேடும் பணி தீவிரம்- நவீன தெர்மல் கேமரா மூலம் கண்டுபிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை
நம்பியூர் அருகே 6-வது நாளாக சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நவீன தெர்மல் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
நம்பியூர்
நம்பியூர் அருகே 6-வது நாளாக சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நவீன தெர்மல் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தை
ஈரோடு மாவட்டம் நம்பியூர் காந்திபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை புகுந்து 3 ஆடுகளை கடித்துக்கொன்றது. பின்னர் மறுநாள் நம்பியூர் செட்டியம்பதி பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு புகுந்து 2 ஆடுகளை கடித்துக்கொன்றது
இதைத்தொடாந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் நேற்று இரவு சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் இருகாலூர், எலத்தூர், செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நவீன தெர்மல் கேமரா
மேலும் அந்த பகுதியில் பதிவான சிறுத்தையின் கால் தடத்தை வைத்தும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கால்தடத்தை வைத்தும் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
அதுமட்டுமின்றி தொடர்ந்து 6-வது நாளாக நேற்று சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டுபிடிப்பதற்காக வனத்துறயைினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவ்வாறு ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ள வனத்துறையினர் இரவு நேரத்தில் பாதுகாப்புடன் சிறுத்தையை தேட நவீன தெர்மல் கேமராவை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கேமரா மூலம் 300 மீட்டர் தொலைவுக்கு அசையும் விலங்கு மற்றும் பொருட்களை காண முடியும்.
குறிப்பாக நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் மற்றும் அதன் தெற்குபதி பகுதியில் வனத்துறையினர் நவீன தெர்மல் கேமரா மூலம் கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஒத்துழைப்பு
இதுகுறித்து டி.என்.பாளையம் வனசரகர் கணேஷ் பாண்டியன் கூறுகையில், ‘சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து சில நாட்களுக்கு ஈடுபடுவார்கள். வனத்துறையினருக்கு பொதுமக்கள் சரியான தகவல்களை தர வேண்டும்.
இரவு நேரங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அருகில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் வீணாக வதந்தியை பரப்பாமல் வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story