750 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள்


750 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 9 Feb 2022 3:10 AM IST (Updated: 9 Feb 2022 3:10 AM IST)
t-max-icont-min-icon

750 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள்

தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 459 கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 750 வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையங்களுக்கு கொண்டு செல்வதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தஞ்சையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் 2 மாநகராட்சி, 2 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் 459 கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 196 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் 48 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 139 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிராம்பட்டினம் நகராட்சியில் 27 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 33 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 60 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
750 வாக்குச்சாவடி மையம்
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 459 கவுன்சிலர் பதவிக்கு 750 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 119 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 27 ஆயிரத்து 564 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 57 பேர் என மொத்தம் 6 லட்சத்து 33 ஆயிரத்து 740 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்வதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.
போலீஸ் பாதுகாப்பு
இதற்காக மாநகராட்சி மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் அலுவலர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் வந்து அவரவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துக்கொண்டு தங்கள் அலுவலகங்களுக்கு சென்றனர். முன்னதாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையிலிருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு பெட்டியிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக இருக்கின்றனவா எனவும் அதிகாரிகள் சோதனை செய்து எடுத்துச் சென்றனர். பின்னர் அங்கு வேட்பாளர்களின் சின்னம் பொறிக்கப்பட்டு ஓட்டுப்பதிவின் போது வாக்குப்பதிவு மையங்களுக்கு எடுத்து செல்லப்படும். 

Next Story