தேர்தலில் அசம்பாவிதத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக 130 பேர் கைது
உள்ளாட்சி தேர்தலில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் உள்பட 130 பேரை சேலம் மாநகர போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
உள்ளாட்சி தேர்தலில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் உள்பட 130 பேரை சேலம் மாநகர போலீசார் கைது செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அதன்படி சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள், 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதையடுத்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் வேட்பாளர்கள் ஓட்டு சேகரித்து வருகின்றனர். அதன்படி சேலம் மாநகர் பகுதியில் தேர்தல் களை கட்டியுள்ளது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க துணை கமிஷனர்கள் மாடசாமி, மோகன்ராஜ் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி பள்ளப்பட்டி, அழகாபுரம், அஸ்தம்பட்டி, சேலம் டவுன், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் பெயர் விவரங்களை சேகரித்தனர்.
கைது
இதையடுத்து தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 130 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, தகராறில் ஈடுபட மாட்டோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை விடுவித்தனர்.
இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது,‘தற்போது கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 130 பேரையும் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அடிக்கடி கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவது தெரிந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்கள்.
Related Tags :
Next Story