‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையின் நடுவில் தடுப்பு சுவரில் இடைவெளி
தர்மபுரி மாவட்டம் பள்ளிப்பட்டி முதல் ஊத்தங்கரை வரை 4 வழிச்சாலை தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அரூர் கடைவீதி வழியாக பஸ் நிலையம், கச்சேரிமேடு வரை சாலை பணிகள் நடந்தன. இதில் பஸ் நிலையத்தில் இருந்து கச்சேரிமேடு வரை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலையின் நடுவில் சுவர் கட்டும் பணி நடக்கிறது. கச்சேரிமேடு, துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்புறம் ஆகிய பகுதிகளில் சாலையை கடக்க இடைவெளி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் திரு.விக நகர் செல்லும் முக்கிய சந்திப்பில் சாலையை கடக்க இடைவெளி அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே திரு.வி.க. நகர் பிரிவு சாலையின் நடுவில் சுவர் கட்டும் போது இடைவெளி விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஊர்மக்கள், பள்ளப்பட்டி, தர்மபுரி.
===
கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் ராமாபுரம் கிராமத்தில் மாதிரி பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் காளிப்பட்டி, மல்லசமுத்திரம் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு சென்றுவர பள்ளி நேரம் மட்டும் பஸ் வருவதால் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்ரமணி, காளிப்பட்டி, நாமக்கல்.
===
நோய் பரவும் அபாயம்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா சிக்கனம்பட்டி ஆதிதிராவிடர் காலனி, வள்ளுவர் தெரு மற்றும் கோலனூர், காட்டூர் மற்றும் சிக்கனம்பட்டி காட்டுவளவு ஆகிய கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதன் அருகில் கல்லூரி மற்றும் பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே சிமெண்ட், எம்.சாண்ட். ஜல்லி ஆகியவை தயாரிக்கும் கல் குவாரி உள்ளது. இதில் இருந்து வெளியேறும் புகையால் கிராம மக்கள், மாணவ-மாணவிகள் ஆஸ்துமா, கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்களால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சவுந்தர், சிக்கனம்பட்டி, சேலம்.
===
தெருநாய்கள் தொல்லை
சேலம் மாவட்டம் மிட்டாபுதூர் படையப்பா பிளாட்டில் தினசரி பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிக்கின்றன. இதனால் தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடித்து வருகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், மிட்டாபுதூர், சேலம்.
===
அதிவேகத்தால் ஆபத்து
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் செல்கின்றனர். இந்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிவேகத்தில் செல்வதால் எதிர்பாராமல் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் ஆங்காங்கே தடுப்பு சுவர் வைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம்.
-ராம், சேலம்.
===
மின்சாரம் இல்லாமல் அவதி
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம் அ.தாழையூர் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம நூல் நிலையத்தில் மின் இணைப்பு இருந்தும் 6 மாத காலமாக மின் இணைப்பு இல்லை. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் மின் இணைப்பை சீரமைத்து தர வேண்டும்.
-முத்துசாமி, அ.தாழையூர், சேலம்.
===
சாலையில் இருபுறமும் வேகத்தடை
சேலம் ராஜாஜி சாலை வழியாக 4 தெரு சந்திப்பு பகுதியில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாலையை கடக்க அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், ராஜாஜி சாலை, சேலம்.
Related Tags :
Next Story