தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள நடுதிடியூர் நடுத்தெருவை சேர்ந்தவர் இசக்கி தாஸ் (வயது 34). தி.மு.க. பிரமுகரான இவர் தண்ணீர் சுத்தப்படுத்தும் எந்திரம் பொருத்தும் மற்றும் பழுது பார்க்கும் வேலையும் செய்து வந்தார். இதற்காக அவர் நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து அதை அலுவலகமாக பயன்படுத்தி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இசக்கி தாஸ் நேற்று அதிகாலை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால, அங்கு செல்லும் வழியிலேயே இசக்கி தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையில், இசக்கி தாஸ் கடந்த ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திடியூர் பஞ்சாயத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மேலும் அவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்து காணப்பட்ட இசக்கி தாஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிகிறது. எனினும் இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லையில் தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story