நாகை-திருச்சி இடையே முன்பதிவு இல்லாத ரெயில் சேவை 22½ மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்
நாகை-திருச்சி இடையே முன்பதிவு இல்லாத ரெயில் சேவை 22½ மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நாகை:-
நாகை-திருச்சி இடையே முன்பதிவு இல்லாத ரெயில் சேவை 22½ மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நாகை-திருச்சி ரெயில்
நாகை-திருச்சி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் சேவை நடந்து வந்தது. இந்த ரெயில் சேவை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது நிறுத்தப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொது போக்குவரத்து சேவைகள் இயங்கி வருகின்றன. கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட பல்வேறு ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. எனவே நாகை-திருச்சி இடையே இயக்கப்பட்ட முன்பதிவு இல்லாத ரெயிலையும் மீண்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
22½ மாதங்களுக்கு பிறகு தொடக்கம்
இதைத்தொடர்ந்து 22½ மாதங்களுக்கு பின்னர் நாகை-திருச்சி ரெயில் சிறப்பு விரைவு ரெயிலாக இன்று இயக்கப்பட்டது. நாகையில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் காலை 11.25 மணிக்கு திருச்சியை சென்றடையும். நாகையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் அந்தணப்பேட்டை, சிக்கல், கீழ்வேளூர், கூத்தூர், அடியக்கமங்கலம், திருவாரூர், குளிக்கரை, திருமதிக்குன்னம், கொரடாச்சேரி, நீடாமங்கலம், கோவில்வெண்ணி, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், குடிகாடு, தஞ்சை, பூதலூர், அய்யனாபுரம், சோழகம்பட்டி, தொண்டமான்பட்டி, திருவெறும்பூர், மஞ்சத்திடல், பொன்மலை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பயணிகள் வரவேற்பு
மாலை 4.30 மணிக்கு மீண்டும் இந்த ரெயில் திருச்சியில் இருந்து புறப்பட்டு அதே மார்க்கத்தில் இரவு 8.20 மணிக்கு நாகையை வந்தடையும். 22½ மாதங்களுக்கு பிறகு முன்பதிவு இல்லாத நாகை-திருச்சி ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதை பயணிகள் வரவேற்றுள்ளனர்.
இந்திய வர்த்தக தொழில் குழுமம் சார்பில் நாகை ரெயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த நாகை-திருச்சி ரெயிலின் என்ஜினுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது ரெயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய வர்த்தக தொழில் குழும தலைவர் சலிம்முதின், இணைச்செயலாளர் பகுருதீன், பொருளாளர் சேகர், நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளர் அரவிந்தகுமார், அமைப்பு செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story