பறக்கும் படை சோதனையில் ரூ.16 லட்சம் பறிமுதல்
சென்னையில் பறக்கும் படை சோதனையில் ரூ.16 லட்சத்து 15 ஆயிரத்து 598 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் எம்.எஸ்.பிரசாந்த், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் ேபடி கூறியதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. சென்னையில் 5,794 வாக்குப்பதிவு மையங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள் மணலியில் இருந்து எடுத்து சென்னையில் உள்ள 22 இடங்களில் வைக்கப்படுகின்றன. பின்னர் அந்தந்த வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வேட்பாளர்களின் பெயர் பொருத்தப்பட்டு அனுப்பப்படும்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் பொருத்தும் பணி வரும் 12-ந்தேதி நடைபெறும். சென்னை மாநகராட்சி தேர்தலில் 15 மண்டலங்களிலும் தலா ஒரு வாக்கு எண்ணும் மையம் என 15 மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தனித்தனி அறைகள் அமைக்கப்படும்.
சென்னையில் உள்ள பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 15 முதல் 17-ந்தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடையும். கண்காணிப்பு கேமரா உதவியுடன் வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதும் கண்காணிக்கப்படும். தபால் வாக்குப்பதிவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு வாக்குச் செலுத்துவதற்கான படிவங்கள் வரும் 10-ந்தேதி முதல் அவர்களின் வீடுகளுக்கே தபால் மூலம் அனுப்பப்பட உள்ளது. வீட்டுக்கு அனுப்பப்படும் படிவங்களை முழுவதும் நிரப்பி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு மீண்டும் அனுப்ப வேண்டும்.சென்னையில் இதுவரை பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.16 லட்சத்து 15 ஆயிரத்து 598 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பரிசுப்பொருட்களாக ரூ.1 கோடியே 26 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story