செல்போன் கடையில் பூட்டை உடைத்து திருட்டு
தூத்துக்குடியில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து செல்போன்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து செல்போன்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
செல்போன் கடை
தூத்துக்குடி கோமதிபாய் காலனியை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் பொன்னுராஜா சேகர் (வயது 32). இவர் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னுராஜா சேகர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 10 செல்போன்கள், 2 பவர் பேங்க் மற்றும் 20 மாதிரி செல்போன்கள் (டம்மி) திருடப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
வேடம் அணிந்து வந்தாரா?
இதுகுறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, கடையின் உள்ளே 3 பழைய துணிகள் கிடந்தன. தொடர்ந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பிச்சைக்காரர் போன்ற ஒருவர் வருவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இதனால் அவர் கடையை உடைத்து திருடிவிட்டு, துணிகளை போட்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் செல்போன்களை திருடி சென்றவர், பிச்சைக்காரர் போன்று வேடம் அணிந்து வந்து திருடினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story