தாசில்தாரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி


தாசில்தாரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
x
தினத்தந்தி 9 Feb 2022 8:02 PM IST (Updated: 9 Feb 2022 8:02 PM IST)
t-max-icont-min-icon

182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு வழக்குகளில் தொடர்புடைய தாசில்தாரின் முன்ஜாமீன் மனுக்களை தேனி கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

தேனி: 


அரசு நிலம் அபகரிப்பு
பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபர்கள் சிலர் அரசு அதிகாரிகள் துணையுடன் அபகரித்தனர். இதுகுறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் கொடுத்த புகாரின் பேரில், தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதில், பெரியகுளத்தில் பணியாற்றிய முன்னாள் ஆர்.டி.ஓ.க்கள் 2 பேர், தாசில்தார்கள் 2 பேர் உள்பட மொத்தம் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பெரியகுளம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் அன்னபிரகாஷ், நில அளவையர் பிச்சைமணி, மண்டல துணை தாசில்தாரின் உதவியாளர் அழகர் ஆகிய 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அன்னபிரகாஷ் உள்பட 3 பேரும் ஜாமீன் கேட்டு தேனி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். 

இந்த 3 பேரின் ஜாமீன் மனுக்களும் நேற்று தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த ஜாமீன் மனுக்களின் மீதான விசாரணையை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) தள்ளிவைத்து தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

முன்ஜாமீன் மனுக்கள்
இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்த 3 வழக்குகளிலும் தொடர்புடைய நபரான தாசில்தார் கிருஷ்ணகுமார் முன்ஜாமீன் கேட்டு மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள், நீதிபதி விஜயா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுக்களின் மீதான விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் அரசு வக்கீல் பாஸ்கரன், "சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த வழக்கில் முக்கிய நபராக கிருஷ்ணகுமார் கருதப்படுகிறார். 

மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி. போலீசில் முதற்கட்ட விசாரணைக்கு ஆஜரான பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். இதனால், முன்ஜாமீன் வழங்கக்கூடாது" என்று ஆட்சேபனை செய்தார்.
இதையடுத்து தாசில்தார் கிருஷ்ணகுமாரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story