சங்கிலியை பறித்து சென்றதாக போலீசாரை அலறவைத்த வாலிபர்
காரில் வந்தவர்கள் கூடுதல் விலைக்குபொருட்களை விற்றதால் ஆத்திரமடைந்த வாலிபர் அவர்களை பழிவாங்கும் எண்ணத்தில் சங்கிலியை பறித்துசென்றதாக புகார் அளித்து மாவட்ட காவல்துறையையே வாலிபர் ஒருவர் அலற வைத்துள்ளார்.
ராமநாதபுரம்,
காரில் வந்தவர்கள் கூடுதல் விலைக்குபொருட்களை விற்றதால் ஆத்திரமடைந்த வாலிபர் அவர்களை பழிவாங்கும் எண்ணத்தில் சங்கிலியை பறித்துசென்றதாக புகார் அளித்து மாவட்ட காவல்துறையையே வாலிபர் ஒருவர் அலற வைத்துள்ளார்.
பொருட்கள் விற்பனை
தூத்துக்குடி மாவட்டம் பூப்பாண்டியபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கார், ஆம்னிவேன் போன்ற வாகனங்களில் பொருட்களை வாங்கி வந்து கிராமங்கள் தோறும் சென்று மலிவு விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சத்திரக்குடி அருகே உள்ள கிராமத்தில் காரில் சென்று பொருட்கள் விற்பனை செய்துள்ளனர்.
இவர்களிடம் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மலிவுவிலை எனக்கருதி ஒரு பொருள் வாங்கி உள்ளார். அந்த பொருளை அக்கம்பக்கத்தினரிடம் காட்டி கூறியபோது அதிக விலை என்றும் தாங்கள் அதனை விட குறைவாக வாங்கிய தாகவும் கூறியுள்ளார். வடிவேலு பட பாணியில் என் வண்டி பெட்ரோலுக்கு எனக்கு மட்டும் 45 தான் குடுக்குது உனக்கு எப்படி 50 குடுக்குது என்ற தொணியில் ஆத்திரமடைந்த வாலிபர் அதனை வெளிக்காட்டாமல் சற்று தள்ளி சென்றுள்ளார். தனியாக சென்று பொருட்களை விற்றவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு குறைந்தவிலை பொருளை ரூ.ஆயிரம் அதிகவிலைக்கு கொடுத்தது குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு மறுமுனையில் பேசிய வியாபாரி விற்றது விற்றதுதான் அதுதான் விலை என்று அசட்டையாக கூறிவிட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த வாலிபர் அவர்களை அங்கும் இங்கும் தேடிபார்த்து கிடைக்காததால் இவர்களை என்ன செய்வது எப்படி பிடிப்பது நம்மளையே ஏமாற்றி சென்று விட்டார்களே இவர்களை ஏதாவது செய்ய வேண்டுமே என்று எண்ணி உள்ளார். உடனடியாக தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சத்திரக்குடி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். வாசலில் இருந்தே காவல்நிலையத்திற்குள் கதறி அடித்துக்கொண்டு உள்ளே ஓடிச்சென்று என் கிணத்தை காணோம் என்ற பாணியில் அங்கிருந்தவர்களிடம் எனது 2 பவுன் சங்கிலியை காணோம் சார் நான் என்ன பண்ணுவேன் காரில் பொருள் விற்க வந்தவர்கள் புத்தம்புதிய செயினை பறித்து சென்றுவிட்டனர் என்று கதறி உள்ளார்.
போலீசார் அதிர்ச்சி
நமது காவல் எல்லைக்குள் செயின்பறிப்பா என்று அதிர்ச்சி அடைந்த போலீசார் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். செயின்பறிப்பு பற்றிய தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் ஒட்டுமொத்த காவல்துறையும் விழித்தக்கொண்டு சோதனை சாவடிகளை உஷார்படுத்தி தேடினர்.
ஒருவழியாக மாலைக்குள் ராமநாதபுரம் அருகே சோதனை சாவடி பகுதியில் வைத்து போலீசார் காரில் வியாபாரம் செய்யும் கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களை ராமநாதபுரம் நகர் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து நன்கு கவனித்து விசாரித்தனர். பிடித்து வரப்பட்ட வர்களுக்கோ தங்களை எதுக்காக கொண்டு வந்துள்ளனர், என்ன நடந்தது நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று ஒன்றும் தெரியாமல் விழித்தனர். இறுதியில் புகார் செய்தவரை அழைத்து வந்து இவர்களில் யார் என்று கேட்டபோது இவுக மாதிரியும் இருக்கு அவுக மாதிரியும் இருக்கு சரியாக தெரியலையே என்று அந்த வாலிபரும் விழித்துள்ளார்.
அப்போதுதான் போலீசாருக்கு அந்த வாலிபர் மீதே சந்தேகம் வந்துள்ளது. அவரை தனியாக அழைத்து சென்று சங்கிலி மாடல் உள்ளிட்டவைகள் குறித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தெரிவித்து கடைசியில் பம்மியபடி சார் தப்பா எடுத்துக்கலைன்னா ஒண்ணு சொல்லவா என்று கேட்டு ரூ.ஆயிரம் கூடுதல் விலைக்கு விற்று என்னை ஏமாற்றி சென்றுவிட்டனர் சார். அதனால்தான் அவர்களை பழிவாங்க இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.
பரபரப்பு
இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் அடுத்த அறைக்கு சென்று அட விசாரிப்பதை நிறுத்துங்கப்பா என்று கூறி தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டனர். கொஞ்சநேரத்தில் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்த சென்றதாக நாடகமாடி ஒட்டுமொத்த காவல்துறையையே அலறவைத்த வாலிபரை என்ன செய்வது என்று தெரியாமல் கடைசியில் சிறிய வழக்கு பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பொருளை அதிக விலைக்கு விற்று சென்றதால் ஆத்திர மடைந்து செயின் பறித்து சென்றதாக காவல்துறையினரை அலற வைத்த வாலிபர் குறித்த பேச்சுதான் கடந்த 2 நாட்க ளாக காவலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Related Tags :
Next Story