அஞ்செட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி


அஞ்செட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 Feb 2022 10:52 PM IST (Updated: 9 Feb 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
கணவரை பிரிந்த பெண்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள கிரியனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 38). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பொம்மனஅள்ளி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். 
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள காட்டு எரப்பட்டியை சேர்ந்தவர் சாலா (40). இவர் கணவரை பிரிந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு காரேபாள்யா பகுதியில் தங்கி வீட்டு வேலை செய்து வந்தார். 
அப்போது வெங்கடேசுக்கும், சாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
2 பேரும் சாவு
இந்த நிலையில் வெங்கடேசும், சாலாவும் நேற்று மோட்டார் சைக்கிளில் ஒகேனக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அஞ்செட்டி அருகே திருமுடுகு வளைவில் சென்ற போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் உள்ள பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த விபத்தில் வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். சாலா படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சாலாவை மீட்டு அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
போலீசார் விசாரணை
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று வெங்கடேஷ், சாலா ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story