பழுதான பழைய கட்டிடம் அகற்றம் தகர கொட்டகையில் படிக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகள்


பழுதான பழைய கட்டிடம் அகற்றம் தகர கொட்டகையில் படிக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகள்
x
தினத்தந்தி 9 Feb 2022 10:52 PM IST (Updated: 9 Feb 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் அருகே பழுதான பழைய பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் மாணவ மாணவிகள் தகர கொட்டகையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே பழுதான பழைய பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் தகர கொட்டகையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
அரசு பள்ளி
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உம்மியம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான வகுப்பறை கட்டிடம் மிகவும் பழுதான நிலையில் இருந்ததால் பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
இதனால் பள்ளியில் தகரம் கொண்டு தற்காலிகமாக கொட்டகை அமைத்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கொட்டகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பெற்றோர் கோரிக்கை
இதுகுறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், பழுதான கட்டிடம் இடிக்கப்பட்டதால் தகர கொட்டகை அமைத்து மாணவ-மாணவிகளுக்கு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் குழந்தைகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இடிக்கப்பட்ட பழைய கட்டிடத்திற்கு மாற்றாக புதிய பள்ளி வகுப்பறை கட்ட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அவர்கள் இதுவரை எந்தத நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story