வெங்கரை உள்பட 5 பேரூராட்சிகளில் தேர்தல் முன்னேற்பாடு பணி-கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு


வெங்கரை உள்பட 5 பேரூராட்சிகளில் தேர்தல் முன்னேற்பாடு பணி-கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு
x
தினத்தந்தி 9 Feb 2022 11:18 PM IST (Updated: 9 Feb 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

வெங்கரை உள்பட 5 பேரூராட்சிகளில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பரமத்திவேலூர்:
கலெக்டர் ஆய்வு 
நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பரமத்திவேலூர், பொத்தனூர், பரமத்தி, பாண்டமங்கலம், வெங்கரை ஆகிய 5 பேரூராட்சிகளில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை நேற்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  வெங்கரை பேரூராட்சியில், வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின் போது பயன்படுத்தப்படும் அழியா மை, எழுது பொருட்கள், ரப்பர் ஸ்டாம்புகள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் ஆகியவை பட்டியலின்படி முழுமையாக உள்ளனவா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதை பார்வையிட்டார். இதேபோல் பரமத்திவேலூர், பரமத்தி, பாண்டமங்கலம், பொத்தனூர் ஆகிய பேரூராட்சிகளிலும் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
மாணவர்களுடன் கலந்துரையாடல்
இதையடுத்து பாண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் சென்றார். அங்கு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது கொரோனாவால் நீண்டகாலம் கழித்து பள்ளிக்கு வந்துள்ளதால், அங்குள்ள சூழல் பிடித்திருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் பிடித்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 
தொடர்ந்து சத்துணவில் வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும், உணவின் தரம், சுவை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் உணவு தயாரிக்கும் பணிகளையும் பார்வையிட்டார். 

Next Story