ராசிபுரம் நகராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு


ராசிபுரம் நகராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Feb 2022 11:18 PM IST (Updated: 9 Feb 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் நகராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

ராசிபுரம்:
பார்வையாளர் ஆய்வு
ராசிபுரம் நகராட்சிக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு பாதுகாப்பு பணிக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள சுவாமி சிவானந்தா சாலை அரசு உயர்நிலைப்பள்ளி, பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளி, அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களை மாவட்ட தேர்தல் பார்வையாளரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அலுவலர்களுக்கு அறிவுரை
அப்போது அவர் பதற்றத்திற்கான காரணங்கள் குறித்து போலீசார் மற்றும் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டறிந்தார். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவின் போது கண்காணிப்பு பணிகளுக்காக நுண் பார்வையாளர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகள் கேமிராக்கள் மூலம் இணையவழியில் கண்காணிக்கப்பட வேண்டும். 
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதிய வெளிச்சம் இல்லாத இடங்களில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறைகள், சாய்வு தள வசதிகள் உள்ளிட்டவைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பாதுகாப்பு அறை
மேலும் அவர் நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், நகராட்சி தேர்தல் அதிகாரி அசோக் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story