நாமக்கல் மாவட்டத்தில் 12-ந் தேதி முதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு- 4 மையங்களில் நடக்கிறது
நாமக்கல் மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு 4 மையங்களில் வருகிற 12-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
நாமக்கல்:
4 மையங்கள்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகியவற்றுக்கான தேர்வுகள் இணையவழியில் கணினிகள் மூலம் 4 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளன.
அதன்படி எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி, தோக்கவாடி கே.எஸ்.ஆர். இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினீயரிங் அன்டு டெக்னாலஜி, குமாரபாளையம் எக்ஸல் நிறுவனம், வெண்ணந்தூர் நாமக்கல் டிஜிட்டல் ஹப் ஆகிய 4 இடங்களில் தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அனுமதி இல்லை
தினமும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் 2 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். காலை தேர்வுகளுக்கு தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 7.30 மணிக்கும், மாலை தேர்வுகளுக்கு மதியம் 12.30 மணிக்கும் ஆஜராக வேண்டும். தேர்வு மையங்களில் தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தேர்வு மைய வளாகங்களுக்குள் தேர்வர்கள் உடன் வருபவர்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
முதல் கட்ட தேர்வுகள் 12-ந் தேதி காலையில் (பேட்ஜ்-1) தமிழ் 1-வது பாடப்பிரிவிற்கும், அன்று மதியம் (பேட்ஜ்-2) தமிழ் 2-ம் பாடப்பிரிவிற்கும் தேர்வு நடைபெற உள்ளது. 13-ந் தேதி காலையில் (பேட்ஜ்-3) வணிகவியல், இந்திய கலாசாரம், மனையியல் ஆகிய பாடப்பிரிவிற்கும், அன்று மதியம் (பேட்ஜ்-4) இயற்பியல் பாடப்பிரிவிற்கும் தேர்வு நடைபெற உள்ளது.
அரசு பஸ்கள் ஏற்பாடு
14-ந் தேதி காலை (பேட்ஜ்-5) புவியியல், அரசியல் அறிவியல், வரலாறு ஆகிய பாடப்பிரிவிற்கும், அன்று மதியம் (பேட்ஜ்-6) வேதியியல் பாடப்பிரிவிற்கும் தேர்வு நடைபெற உள்ளது. 15-ந் தேதி காலை (பேட்ஜ்-7) பொருளியல், தாவரவியல், உயிர் வேதியியல் பாடப்பிரிவிற்கும், அன்று மதியம் (பேட்ஜ்-8) விலங்கியல், உடற்கல்வி பாடப்பிரிவிற்கும் தேர்வு நடைபெற உள்ளது. 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 2-ம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது.
எனவே தேர்வர்கள் தங்களுக்கான பேட்ஜ் எண் மற்றும் பாடப்பிரிவுகளை சரியாக தெரிந்து கொண்டு, தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வு நாட்களில் தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story