தோல்விபயம் காரணமாக அ.தி.மு.க. வேட்பாளர்களை மிரட்டுகின்றனர். தி.மு.க.மீது எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு


தோல்விபயம் காரணமாக அ.தி.மு.க. வேட்பாளர்களை மிரட்டுகின்றனர். தி.மு.க.மீது எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Feb 2022 11:57 PM IST (Updated: 9 Feb 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்விபயம் காரணமாக அ.தி.மு.க. வேட்பாளர்கள் மிரட்டப்படுகின்றனர் என வேலூரில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

வேலூர்

தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்விபயம் காரணமாக அ.தி.மு.க. வேட்பாளர்கள் மிரட்டப்படுகின்றனர் என வேலூரில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அறிமுக கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங்கினார்.

புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப வேலூர் மண்டல செயலாளர் ஜனனி பி.சதீஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் ஜெயபிரகாசம், வேலூர் தொகுதி முன்னாள் செயலாளர் சி.கே.சிவாஜி உள்பட நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வாழ்த்தி பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி தலைகீழாக...

அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பல திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தினோம்.
அ.தி.மு.க. ஆட்சியில் இந்தியாவிலேயே உயர் கல்வி பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.
அ.தி.மு.க. ஆட்சி ஜனநாயக முறைப்படி நடந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சி தலைகீழாக நடக்கிறது.

‘நீட்’ தேர்வு காரணமாக ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் பயில முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதனால் ஆண்டுக்கு 541 மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

அ.தி.மு.க. கொள்கையில் மாறாது

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் தானிய உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முதலிடத்தில் இருந்தது.
அ.தி.மு.க. அரசு சிறுபான்மை இன மக்களுக்காக தொடர்ந்து ஆதரவு அளிக்கும். அ.தி.மு.க. கொள்கையிலிருந்து என்றும் மாறாது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளையும், வாக்கு எண்ணுவதையும்,வாக்குப்பதிவையும், வாக்குப் பெட்டி வைக்கும் இடத்தையும், வாக்கு எண்ணிக்கையும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும்.

அடுத்த தேர்தலில் சக்கரம் போல் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதனால் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும், நடுநிலையோடும் ஜனநாயக முறைப்படி மக்களுக்காகவே செயல்பட வேண்டும். அப்பாவி மக்களை காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது.

தி.மு.க.வுக்கு தோல்வி பயம்

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு காப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. ஆனால் இன்று தி.மு.க.ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
கொலைகள், கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் அனுதினமும் நடந்து வருகிறது.

வேலூரில் அ.தி.மு.க.வினர் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் தி.மு.க.வினரால் தோல்வி பயம் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. கொள்ளை அடிப்பதற்காகவே தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்துள்ளனர். 
தி.மு.க.விற்கு தேர்தலை சந்திக்க பயம் வந்துவிட்டது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தி.மு.க.வினர் மிரட்டிக் கொண்டு உள்ளனர்.

ஓடி ஒளிந்து கொண்டார்கள்

பொங்கல் தொகுப்பு கொடுக்கும் நிகழ்ச்சியில் தி.மு.க.வினர் கலந்து கொள்ளவில்லை. ஓடி ஒளிந்து கொண்டார்கள். அவர்களுக்கு தேர்தல் பயம் ஏற்பட்டுள்ளது. கோழையாக மாறியுள்ளனர். தேர்தலை சந்திக்க திராணியில்லை.

பொங்கல் தொகுப்பு மக்களுக்காக கொடுக்கப்படவில்லை. ஊழல் செய்வதற்காக கொடுத்துள்ளனர். அதன் மூலம் ரூ.500 கோடி ஊழல் செய்துள்ளார்கள்.

மக்கள் விரோத ஆட்சி

இதற்கு பதில் ஆயிரம் ரூபாய் பணத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுத்திருக்கலாம்.
தமிழக மக்கள் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நம்பி ஓட்டுப் போட்டார்கள். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முதல்-அமைச்சரான அவர் அதை நிறைவேற்றவில்லை.

இதுபோல பல்வேறு பொய்களைச் சொல்லி அவர் ஆட்சியில் அமர்ந்துள்ளார். மக்கள் விரோத ஆட்சியாக தி.மு.க செயல்படுகிறது.
வேலூர் மாநகராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 58 வார்டுகளிலும் அ.தி.மு.க.வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story