தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுகாதாரமற்ற பஸ்நிலையம்
திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சியில் உள்ள பஸ்நிலையம் மிகவும் சுகாதாரமற்று காணப்படுகிறது. அரியலூர், ஜெயங்கொண்டம், தஞ்சை போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களும், புற நகர் செல்லக்கூடிய பஸ்களும் அதிகளவில் வந்து செல்கின்றன. ஆனால் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. குறிப்பாக பிச்சைக்காரர்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. மேலும் இவர்கள் நடைபாதையில் தூங்குவதால் பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பஸ்நிலையத்தை தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவானி, லால்குடி, திருச்சி.
பொதுபாதை ஆக்கிரமிப்பு
திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூர் அண்ணாநகரில் பொதுமக்கள் செல்லக்கூடிய பொதுபாதையில் மூங்கில் தட்டி, மரக்கட்டைகள், கருங்கற்கள், தகரசீட்டு கொட்டகை போட்டு அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தியா, எடமலைப்பட்டி புதூர், திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி உறையூர் டாக்கர் சாலை, காமாட்சி அம்மன் கோவில் சாலை, காசி விளங்கி மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும், மங்கள நகர், லிங்கம் நகர், ஆர்.வி.எஸ். நகர், குழுமணி ரோடு பகுதியில் ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் அதிகளவில் சாலைகளில் சுற்றித்திரிகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.
ரேஷன் கடை அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நீலியம்பட்டியில் ரேஷன் கடை இல்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் வீண் அலைச்சலும், கால விரயமும் ஏற்படுகிறது. எனவே நீலியம்பட்டியில் முழுநேர அல்லது பகுதி நேர ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹரிகரசுதன், திருச்சி.
வீணாகும் குடிநீர்
திருச்சி மாவட்டம், கே.கே.நகர் மகாலட்சுமி நகரில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து கடந்த 3 மாதங்களாக குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வீணாகும் குடிநீரை சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள், கே.கே.நகர், திருச்சி.
Related Tags :
Next Story