கலெக்டர் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி பண்ணாரி சோதனைச்சாவடியில் இன்று போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு


கலெக்டர் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி  பண்ணாரி சோதனைச்சாவடியில் இன்று போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு
x
தினத்தந்தி 9 Feb 2022 7:58 PM GMT (Updated: 9 Feb 2022 7:58 PM GMT)

கலெக்டர் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பண்ணாரி சோதனைச் சாவடியில் இன்று (வியாழக்கிழமை) போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

கலெக்டர் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பண்ணாரி சோதனைச் சாவடியில் இன்று (வியாழக்கிழமை) போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
போக்குவரத்துக்கு தடை
சத்தியமங்கலம் வனப்பகுதியில் வன விலங்குகள் உயிரிழப்பை தடுக்க பண்ணாரி-திம்பம் வனச்சாலையில் இரவு நேர போக்குவரத்தை தடை செய்து 2019-ம் ஆண்டு, ஈரோடு மாவட்ட கலெக்டர் வெளியிட்ட உத்தரவை இன்று (வியாழக்கிழமை) முதல் அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையில் இந்த உத்தரவால் தாளாவாடி பகுதியில் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆதார தொழிலான விவசாய விளை பொருள்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்.
மாலை 6 மணிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டால் விளைபொருள்களை ஈரோடு, கோவை, தஞ்சை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு காலங்காலமாக கொண்டு செல்வது தடைப்படும். இதனால் தாளவாடி மலைப்பகுதி மக்கள் விவசாயத்தை கைவிட்டு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.
திட்டமிட்டபடி போராட்டம்
எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பண்ணாரி சோதனைச்சாவடி அருகில் இன்று (வியாழக்கிழமை) காலை தாளவாடி மலைப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் போராட்ட  குழுவினர் மற்றும் மலைவாழ் மக்கள் பிரதிநிதிகளிடம் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது கலெக்டர் கூறும்போது, 'கோர்ட்டு உத்தரவை கட்டாயம் அமல்படுத்தியாக வேண்டும். அதேசமயத்தில் மலை பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று பிரச்சினைக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்' என்றார்.
இதனை பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏற்கவில்லை. இந்த பிரச்சினையில் அரசின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டபடி இன்று (வியாழக்கிழமை) போராட்டம் நடைபெறும் என கூட்டத்திலேயே அறிவித்துவிட்டு கலைந்துசென்றனர்.

Next Story