சாத்தூரில் வென்று சாதனை படைக்கப்போவது யார்?


சாத்தூரில் வென்று சாதனை படைக்கப்போவது யார்?
x
தினத்தந்தி 10 Feb 2022 1:54 AM IST (Updated: 10 Feb 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் நடைபெற உள்ள தேர்தலில் வென்று நகராட்சி தலைவர் என்ற சாதனை படைக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

சாத்தூர், 
தென்மாவட்டங்களில் பிரபலமான ஊர்களில் ஒன்று சாத்தூர்.
தேசிய நெடுஞ்சாலையில் நெல்லைக்கும், மதுரைக்கும் இடையில் அமைந்துள்ள ஊர்களில் சாத்தூருக்கு முக்கிய இடம் உண்டு.
மாரியம்மன் கோவில்
சாத்தூர் என்றதும் அதன் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பக்தர்களுக்கு நிச்சயம் நினைவுக்கு வரும்.
அதே போன்று பதார்த்தங்களில் சாத்தூர் சேவுக்கு என்று தனி மவுசு உண்டு. அங்கு செல்பவர்கள் அதை நிச்சயம் வாங்கி வருகிறார்கள். இதுபோல் சாத்தூர் வத்தல் மற்றும் வெள்ளரி என்றாலும் விரும்பி வாங்குகிறார்கள்.
சாத்தூர் பகுதியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிப்பு தொழில் பிரபலமானது. ஏராளமானோர் விவசாயமும் செய்துவருகிறார்கள்.
மைப்பேனா பயன்பாடு அதிகமாக இருந்த காலத்தில் சாத்தூரில் பேனா நிப்பு தயாரிக்கும் தொழில் சிறந்து விளங்கியது. ஆனால் தற்போது அந்த தொழில் நலிவு பெற்றுள்ளது. சாத்தூர் ஊரின் நடுவே வைப்பாறு செல்வது பெருமைக்குரியது. 
காமராஜர் போட்டியிட்ட தொகுதி
அரசியல் ரீதியாக குறிப்பிட்டாக வேண்டும் என்றால், 1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் 2 முறை பெருந்தலைவர் காமராஜர் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்று தமிழக முதல்-அமைச்சர் ஆனது குறிப்பிடத்தக்கது. 
அதே போல் சாத்தூர் நகராட்சிக்கும் சிறப்புகள் பல உள்ளன. 1960-ம் ஆண்டு  ஊராட்சியாக இருந்துள்ளது. 1960-ம் ஆண்டு ஊராட்சி மன்ற தேர்தலின் போது 15 வார்டுகள் இருந்தன.
தலைவராக சீனிவாசன் நாயுடு, துணை தலைவராக தியாகராஜன் செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவிக்காலத்தில் 31.7.1961-ம் ஆண்டு சாத்தூர் நகர மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு, அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் தொடங்கி வைத்தார். 
சாத்தூர் 1966-ம் ஆண்டு பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, அதே 15 வார்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லாமல் தேர்தல் நடைபெற்றது. அந்த நேரடி தேர்தலில் மாணிக்கம் தலைவராகவும், கருப்பையா துணை தலைவராகவும் வெற்றி ெபற்றனர்.
நகராட்சியாக உயர்ந்தது 
17.1.1970 அன்று சாத்தூரை 3-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
1970-ம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி நேரடி தேர்தலில் திருப்பதி நாடார் தலைவராகவும், சுப்பையா தேவர் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1975 முதல் 1986 வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. 9.5.1983 அன்று சாத்தூர் 2-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது 20 வார்டுகளாக பிரிக்கப்பட்டது.
1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த குருசாமி வெற்றி பெற்று நகராட்சி தலைவரானார். 
1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலின் போது, 24 வார்டுகளாக மறுவரையறை செய்யப்பட்ட தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்ந்தது. 
சாத்தூர் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது சரோஜா ஜெயச்சந்திரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடராஜன் துணைத் தலைவராக மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2001-ம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி நேரடி தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த சுபாஷினி அசோக் நகராட்சி தலைவராக வெற்றி பெற்றார். துணைத்தலைவராக குருசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006-ம் ஆண்டு மறைமுக தேர்தலாக நடந்துள்ளது. இந்த தேர்தலில் நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த குருசாமி வெற்றி பெற்றார். துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த அசோக் வெற்றி பெற்றார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த டெய்சி ராணி தலைவராக வெற்றி பெற்றார். அதே கட்சியை சேர்ந்த கிருஷ்ணன் துணைத்தலைவராக பதவி வகித்தார். 
தற்போதைய தேர்தலின் மூலம் நகராட்சி நிர்வாகம் யார் வசம் செல்ல இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளூர் வாக்காளர்களிடம் எழுந்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமின்றி பல முனை போட்டி நிலவுவதால் வார்டுகளை கைப்பற்ற கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து உள்ளது.
கோரிக்கைகள்
சாத்தூர் நகர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். அத்துடன் அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். 
சாத்தூர் பகுதியில் புதிய தொழிற்சாலையை நிறுவி மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சாத்தூர் நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டி, விபத்தில்லா போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும். 
சாத்தூர் வைப்பாற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். செண்பகவல்லி அம்மன் கோவில் அணைக்கட்டினை சீரமைத்து எப்போதும் ஆற்றில் நீர்வரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும். கழிவுநீர் குழாய் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. அவற்றை விரைந்து முடிக்க வேண்டும். 
நகராட்சி தேர்தலில் வெற்றி பெறுகிறவர்கள், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார்கள் என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். எனவே தேர்தலில் வெற்றி பெற்று சாதிக்கப் போவது யார்? என்பதை வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு செய்து மக்கள் நிர்ணயிக்க இருக்கிறார்கள்.


Next Story