தினத்தந்தி புகாா் பெட்டி
மக்கள் குறைகைள தொிவிக்கும் புகாா் பெட்டி பகுதி
ஆபத்தான பள்ளம்
அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் கெட்டிசமுத்திரம் ஏரி உள்ளது. இதிலிருந்து கசிவுநீர் வெளியேறி ரோட்டில் உள்ள பள்ளத்தில் கடந்த 3 மாதங்களாக தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் பாசிபடர்ந்தபடி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் வழுக்கி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே உயிர் சேதம் ஏற்படும் முன் பள்ளத்தை சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள், புதுப்பாளையம்
குவிந்து கிடக்கும் குப்பை
அந்தியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ரோட்டில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. உடனே குப்பைகளை அள்ளவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.சின்னண்ணன், அந்தியூர்
தேங்கும் கழிவுநீர்
பவானி அருகே எலவமலை ஊராட்சிக்கு உள்பட்டது மூவேந்தர் நகர். இங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. மேலும் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றுக்கும் செல்கிறது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே எங்கள் பகுதியில் வடிகால் வசதி செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முனிராஜ், மூவேந்தர் நகர்.
சமுதாய நலக்கூடம் வேண்டும்
சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை என்.ஜி.புதூர் ஏ.டி.காலனியில் சமுதாய நலக்கூடம் இல்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள். உடனே சமுதாய நலக்கூடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ப.ராஜன், ஏ.டி.காலனி, என்.ஜி.புதூர்.
கழிப்பிட வசதி
நம்பியூர் பஸ்நிலையத்துக்கு நாள்தோறும் 75-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. மாணவ-மாணவிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வருகிறார்கள். ஆனால் இங்கு இலவச கழிப்பிட வசதி இல்லை. இதனால் பெண்கள், மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். சிலர் பொது இடங்களையே கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் பஸ்நிலையத்தில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே நம்பியூர் பஸ்நிலையத்தில் இலவச கழிப்பிடம் கட்டிக்கொடுக்க சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், நம்பியூர்.
பழுதான மின்கம்பங்கள்
திங்களூர் தேர்வீதியில் கான்கிரீட்டுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிய ஆபத்தான நிலையில் 2 மின்கம்பங்கள் உள்ளன. மேலும் இந்த கம்பங்கள் போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கின்றன. அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்குள் மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த 2 மின்கம்பங்களையும் மாற்றி அமைக்க வேண்டும்.
தமிழன், திங்களூர்
-------------
Related Tags :
Next Story