“உள்ளாட்சி அமைப்புகளில் ஊழலற்ற நிர்வாகத்தை தருவோம்”
பட்டாசு தொழிலை மத்திய அரசு பாதுகாக்கிறது என்றும், உள்ளாட்சி அமைப்புகளில் ஊழலற்ற நிர்வாகத்தை தருவோம் எனவும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
சிவகாசி,
பட்டாசு தொழிலை மத்திய அரசு பாதுகாக்கிறது என்றும், உள்ளாட்சி அமைப்புகளில் ஊழலற்ற நிர்வாகத்தை தருவோம் எனவும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
பட்டாசு தொழில்
விருதுநகர் மேற்கு மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருத்தங்கலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களுக்கு சேவை செய்யவே களத்துக்கு வந்து இருக்கிறார்கள். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகிறீர்கள். இந்த தொழிலை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து மத்திய அரசு பாதுகாத்து வருகிறது. மத்தியில் பா.ஜ.க. அரசு இருக்கும் வரை பட்டாசு தொழிலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை ஏற்பட்டது. சீனாவில் இருந்து கள்ளத்தனமாக வந்து கொண்டிருந்த பட்டாசுகளை மத்திய அரசு தடுத்துள்ளது.
விடியல் தரவில்லை
சுப்ரீம் கோர்ட்டில் சிலர் தேவையில்லாமல் பட்டாசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் வராது. இது சுப்ரீம்கோர்ட்டில் பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பெண்கள் முன்னேற்றத்துக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 70 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் அரசால் செய்ய முடியாத பல திட்டங்களை பா.ஜ.க. அரசு செய்துள்ளது.
தி.மு.க.வினர் விடியல் தருகிறோம் என்று கூறி சட்டமன்ற தேர்தலில் வாக்கு கேட்டனர்.
ஆனால் இன்னும் விடியல் தரவில்லை. ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு தரம் இல்லாமல் இருந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் மீண்டும் தி.மு.க.வுக்கு வாய்ப்பு அளிக்க கூடாது. பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் இல்லாத நிர்வாகம் அமைய வேண்டும் என்றால் பா.ஜ.க.வை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.
நீட் தேர்வு
சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவர்கள், நீட் தேர்வு மூலம் தற்போது மருத்துவர்களாக ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். மதுரை அருகே கூலி தொழிலாளி மகள் தங்கபேச்சிக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் படிக்க தேவையான உதவிகளை பா.ஜ.க. செய்து கொடுத்துள்ளது. பா.ஜ.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story