எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடங்கியது
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு நேற்று திருப்புதல் தேர்வு தொடங்கியது.
நெல்லை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு நேற்று திருப்புதல் தேர்வுகள் தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையும், பிளஸ்-2 மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடந்தது. ஒரு அறைக்கு 20 முதல் 25 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதினார்கள்.
பொதுத்தேர்வு போல் திருப்புதல் தேர்விலும் வினாத்தாளை படிக்க மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் மாணவ- மாணவிகள் முககவசம் அணிந்தும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தும் தேர்வு எழுதினர்.
திருப்புதல் தேர்வு நடைபெறும் ஒரு சில பள்ளிகளில் பெரும்பாலான வகுப்புகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு வருகிற 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.
Related Tags :
Next Story