பா.ஜனதா மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்-மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு


பா.ஜனதா மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்-மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
x
தினத்தந்தி 10 Feb 2022 2:44 AM IST (Updated: 10 Feb 2022 2:44 AM IST)
t-max-icont-min-icon

ஊழலை ஒழிப்போம், முன்னேற்ற பாதையில் செல்வோம் எனவும், பா.ஜனதா மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள் எனவும் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

மதுரை
ஊழலை ஒழிப்போம், முன்னேற்ற பாதையில் செல்வோம் எனவும், பா.ஜனதா மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள் எனவும் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். 
பொதுக்கூட்டம் 
மதுரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் மற்றும் தேர்தல் அறிக்கை விளக்்க பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் முன்னிலை வகித்தார். இதில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 
தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துவது மதுரை. அந்த மதுரையில் சரித்திர கூட்டம் இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. மதுரை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 100 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 54 பெண்கள், 46 பேர் ஆண்கள். இவர்கள் எந்த பின்புலம் இல்லாத சாதாரண பொதுமக்கள். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தற்போது களத்தில் குதித்து இருக்கிறார்கள். 
ஊழல் 
உள்ளாட்சியில் நல்லாட்சி தருவோம் என தி.மு.க. கூறிவருகிறது. ஆனால் அவர்கள் நல்லாட்சி என்றுமே தந்ததில்லை. மக்களுக்காக அவர்கள் ஆட்சி செய்வதில்லை. தங்களுக்காக, தங்கள் வளத்தை பெருக்கி கொள்வதற்காக மட்டுமே ஆட்சி செய்கிறார்கள். ஊழல் செய்வது ஒன்றே அவர்கள் குறிக்கோளாக உள்ளது. 80 ஆண்டுகாலம் ஒரே ஆட்சி நடந்தால் எப்படி மக்களுக்கு சலிப்பு தட்டுமோ, அதுபோல தி.மு.க.வின் 8 மாத கால ஆட்சியில் மக்களுக்கு சலிப்பு தட்டிவிட்டது. 
பொங்கல் ரேஷன் பொருட்கள் தரமற்றவையாக இருந்தன. அதில் வழங்கப்பட்ட ஒரு கரும்பை ரூ.25-க்கு விவசாயிகளிடம் இருந்து வாங்கி 40 ரூபாய்க்கு அரசுக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த பணியை அந்தந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் செய்தனர். 
நல்ல திட்டங்கள் 
அதேபோல ஒரு மஞ்சள் பை ரூ.5, 10-க்கும் கிடைக்கும் போது ரூ.60-க்கு வாங்கி இருக்கிறார்கள். இதுபோன்ற ஊழல்களை பா.ஜ.க. ஒருபோதும் அனுமதிக்காது. மதுரையிலும் ஒரு அமைச்சர் ஊழல் செய்து கொண்டிருக்கிறார். இங்குள்ள ஒரு எம்.பி. சண்டை போடுவதற்காகவே நாடாளுமன்றம் செல்கிறார். அவரது செயலால் மதுரைக்கு கிடைக்க வேண்டிய பல நல்ல திட்டங்கள் தடைபட்டு இருக்கிறது. இருந்தாலும் பிரதமர் மோடி மதுரைக்காக எய்ம்ஸ், ஸ்மார்ட் சிட்டி உள்பட பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறார். 
மதுரை எய்ம்ஸ் பணிகள் கொரோனா காலமாக சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது பணிகள் முழு வீச்சில் தொடங்கி விட்டன. 50 மாணவர்கள் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. இந்த கல்லூரிக்கு தேவையான பேராசிரியர்கள், மருத்துவர்கள், நர்சுகளை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் மதுரை சுகாதார தலைநகரமாக மாறும்.
நம்பிக்ைக வைத்து... 
நீட் தேர்வில் தி.மு.க. நாடகமாடுகிறது. நீட் தேர்வால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி இருக்கிறது. நீட் மூலம் தான் உசிலம்பட்டியை சேர்ந்த தங்கபேச்சிக்கு மருத்துவ சீட் கிடைத்திருக்கிறது. பா.ஜ.க.வை மதவாத கட்சி என்கின்றனர். ஆனால் இங்கு போட்டியிடும் 100 வேட்பாளர்களில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். 
நாங்கள் இந்துக்களுக்கு மட்டும் அல்ல, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்போம். இங்கிருக்கும் பா.ஜனதா வேட்பாளரில் ஒருவர் மேயராக வரவேண்டும். ஊழலை ஒழிப்போம், முன்னேற்ற பாதையில் செல்வோம். அதற்காக மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள். 
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story