பெண்கள் அணியும் சில ஆடைகளால் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரிக்கிறது - பா.ஜனதா எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை
பெண்கள் அணியும் சில ஆடைகளால் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரிக்கிறது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
சீருடை கட்டாயம்
பர்தா விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவி பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்தார். பெண்கள் தங்களுக்கு பிடித்தமான பர்தா, பிகினி உள்பட எந்த ஆடைகளை வேண்டுமானாலும் அணிய அவர்களுக்கு உரிமை உள்ளது. இதை யாரும் தடுக்கக்கூடாது என்று கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக பா.ஜனதாவை சேர்ந்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
"பிரியாங்கா காந்தி ஒரு பெண். அவர் ஒரு காங்கிரஸ் தலைவி. பெண்களின் அடிப்படை உரிமைகளை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. மும்பை, கேரளா ஐகோர்ட்டுகள் பள்ளி-கல்லூரிகளில் சீருடை அணிவது கட்டாயம் என்று தீர்ப்பு கூறியுள்ளன. அதே கருத்தை தான் கர்நாடக அரசு கூறியுள்ளது. பிகினி உடைகள் கூட அணியலாம் என்று பிரியங்கா காந்தி கூறியிருப்பது இழிவாக உள்ளது. கல்லூரி மாணவிகள் படிக்கும்போது கட்டாயம் சீருடை அணிய வேண்டும் அல்லது உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணிய வேண்டும்.
கற்பழிப்புகள் அதிகரிப்பு
சில பெண்கள் அணியும் ஆடைகளால் தன் கற்பழிப்புகள் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. அந்த ஆடைகள் ஆண்களை தூண்டும் வகையில் உள்ளது. இது நல்லதல்ல. ஏனென்றால் பெண்களுக்கு நமது நாட்டில் மரியாதை உள்ளது. அவர்களை தாய் இடத்தில் பார்க்கிறோம். அதனால் பிரியங்கா காந்தி தனது கருத்தை வாபஸ் பெற்று பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அவருக்கு நமது நாட்டின் கலாசாரம்-பண்பாடு தெரியவில்லை. அவரது தாயாருடையது இத்தாலி கலாசாரம். அவர் அவ்வாறு கூறிய கருக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. அது சரியல்ல. சீருடை விவகாரத்தை பா.ஜனதா அரசியல் செய்யவில்லை.
இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.
தான் கூறிய கருத்து சர்ச்சையானதை அடுத்து அவர் தனது கருத்துக்காக பெண்களிடம் மன்னிப்பு கேட்பதாக கூறினார். பெண்களை தான் மதிப்பதாகவும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story