அரசாணை நகல் எரிப்பு போராட்டம்


அரசாணை நகல் எரிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2022 3:07 AM IST (Updated: 10 Feb 2022 3:07 AM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதலில் விவசாயிகளை பாதிக்கும் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் அரசாணை நகலை தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 49 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்;
நெல் கொள்முதலில் விவசாயிகளை பாதிக்கும் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் அரசாணை நகலை தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 49 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி உரிமை மீட்புக் குழு
நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவை கைவிடக்கோரி தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் அறிவித்து இருந்தனர்.
அதன்படி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் நிர்வாகிகள் வைகறை, பழ.ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
அரசாணை நகல் எரிப்பு
ஊர்வலத்தில் நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவை கைவிட வேண்டும். அதிகளவில் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும், தேவையான அளவு கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும், கொள்முதல் நிலையங்களில் லஞ்ச, ஊழலை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஊர்வலம் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு வந்தபோது அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 49 பேர் கைது செய்யப்பட்டனர்.
அடிமாட்டு விலைக்கு விற்பனை
முன்னதாக ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறுகையில், நெல் கொள்முதல் செய்ய இணையதளத்தில் முன்பதிவு செய்து அவர்கள் குறிப்பிடும் நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நெல்லை விற்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு அதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் சுமையாக உள்ளது. இதனால் விவசாயிகள், தனியாரிடம் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இணையதள பதிவு முறையை கைவிட்டுவிட்டு நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும் கொள்முதல் நிலையங்களில் குறிப்பிட்ட அளவுதான் நெல் கொள்முதல் செய்வோம் என்ற நடைமுறையை மாற்றி எவ்வளவு முட்டைகள் வரை கொள்முதல் செய்ய முடியுமோ அவ்வளவு முட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தால் உடனடியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் கேட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story