நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 100 சதவீதம் வெற்றி உறுதி-சேலம் பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 100 சதவீதம் வெற்றி உறுதி என்று சேலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
சேலம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 100 சதவீதம் வெற்றி உறுதி என்று சேலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
தேர்தல் பிரசார கூட்டம்
சேலம் மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 60 வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் நெய்காரப்பட்டி பொன்னாகவுண்டர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பொற்கால ஆட்சி
தமிழகத்தில் அ.தி.மு.க. தவிர வேறு எந்த கட்சியும் அதிக முறை ஆட்சி புரிந்தது கிடையாது. ஏனென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்கள்.
ஜெயலலிதா கண்ட கனவுகளையும், திட்டங்களையும் அதன்பிறகு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார். கடந்த 10 ஆண்டுகள் அ.தி.மு.க.வின் பொற்கால ஆட்சி நடந்தது. அ.தி.மு.க.வை பொறுத்த வரையில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுத்துள்ளோம்.
தி.மு.க. துரோகம் செய்தது
2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி புரியும் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் வழக்கம்போல் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதுபற்றி கேட்டால் நாங்கள் எப்படியாவது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து தான் எனது முதல் கையெழுத்து என்று கூறினார். அது நடந்ததா? இல்லை. மத்தியில் காங்கிரஸ்- தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தான் நீட் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தி.மு.க.வை சேர்ந்த காந்திசெல்வன் மத்திய மந்திரியாக இருந்தார். நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. துரோகம் செய்து விட்டது. தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் முடிவு ஆகும். எப்படி காவிரி விவகாரத்தில் 17 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றோமா? அதேப்போல் நீட் தேர்வு விவகாரத்திலும் சட்ட ரீதியாக சந்திக்க வேண்டும்.
விளம்பர ஆட்சி
அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு முதலில் ரூ.1,000-மும், அதன்பிறகு ரூ.2,500-ம் கொடுத்தோம். பொங்கல் பொருட்களும் தரமானதாக இருந்தது. ஆனால் தி.மு.க. கொடுத்த பொங்கல் பரிசு தொகுப்பில் பொருட்கள் தரமானதாக இல்லை என்று மக்களே தெரிவிக்கிறார்கள். அதோடு பணம் எதுவும் கொடுக்கவில்லை. அ.தி.மு.க. கொடுக்கிற கட்சி. ஆனால் தி.மு.க. வாங்குகிற கட்சி என்று அனைவருக்கும் தெரியும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து என்று கூறினார்கள். அதுவும் செய்யவில்லை. விளம்பரத்துக்காக மு.க.ஸ்டாலின் ஆட்சி புரிந்து வருகிறார். அவர்களது நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நடக்கிறது. இதனால் அ.தி.மு.க.வுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. எனவே, அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க. வின் பொய் பிரசாரத்தையும் மக்களிடம் எடுத்துக்கூறி நமது வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும்.
100 சதவீதம் வெற்றி
உள்ளாட்சி தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றியானது, தி.மு.க.வுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 100 சதவீதம் வெற்றி உறுதி. இதற்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிரமணியம், ராஜமுத்து, மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story