ஆம்னி பஸ்சில் கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்


ஆம்னி பஸ்சில் கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Feb 2022 5:53 PM IST (Updated: 10 Feb 2022 5:53 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து ஆறுமுகநேரிக்கு தனியார் ஆம்னி பஸ்சில் கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

ஆறுமுகநேரி:
பெங்களூருவில் இருந்து ஆறுமுகநேரிக்கு தனியார் ஆம்னி பஸ்சில் கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பறக்கும் படையினர் சோதனை
ஆறுமுகநேரி கடலோர காவல் சோதனைச் சாவடி அருகே திருச்செந்தூர் மண்டல துணை தாசில்தார் கண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலையில் அந்த வழியாக பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பஸ்சை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அந்த பஸ்ஸின் கீழே உள்ள லக்கேஜ் அறையில் இருந்த 2 பெட்டிகளின் மீது கோப்பிக் கொட்டை என எழுதப்பட்டு இருந்தது. 
மேலும் அந்த பெட்டிகளில் பெங்களூருவில் இருந்து ஒரு தனியார் ஏஜென்டு மூலமாக ஆறுமுகநேரியில் கணேசன் என்பவரின் முகவரிக்கு அனுப்பப்பட்டது தெரிய வந்தது. அதற்கான ரசீதை பஸ் டிரைவர் காட்டியுள்ளார். 
உயர்ரக மதுபான பாட்டில்கள்
அந்த ரசீதை பார்த்தபோது அதில் முழுமையான முகவரி இல்லை. ஆனால் ஒரு அலைபேசி எண் இருந்துள்ளது. மேலும் அந்த பெட்டியின் மேலே காப்பிக்கொட்டை என எழுதி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பறக்கும் படையினர் அந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அந்தப் பெட்டியில் உயர்ரக மதுபான பாட்டில்கள் இருந்தன. அதாவது தலா ஒரு லிட்டர் அளவு கொண்ட 27 மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
தேர்தல் பறக்கும் படையினர் இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசார் தீவிர விசாரணை
 முதல்கட்ட விசாரணையில் அந்த அட்டை பெட்டிகளில் இருந்த அலைபேசி எண் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்ததுடன், முகவரியும் போலியானது என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பெங்களூருவில் இந்த பாட்டில்களை அனுப்பிய நபர்கள் குறித்தும், ஆறுமுகநேரியில் யாருக்கு கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story