ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு சுயேச்சை வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி
கடை வைக்க அனுமதி தரக்கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு சுயேச்சை வேட்பாளர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி
கடை வைக்க அனுமதி தரக்கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு சுயேச்சை வேட்பாளர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிளப் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது யாகூப்(வயது 38). கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் தள்ளுவண்டி மூலம் ‘பாஸ்ட் புட்’ கடை நடத்தி வந்தார். மேலும் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோத்தகிரி பேரூராட்சி 11-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் முகமது யாகூப், கடை வைத்து வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கி தரக்கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு சரக்கு வாகனத்தில் வந்தார். பின்னர் அவர் வாகனத்தில் இருந்தபடியே தன் மீது டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
தடுத்து நிறுத்திய போலீசார்
இதை அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் போலீசார் கண்டு உடனடியாக அவரை தடுத்தனர். மேலும் அவரை சரக்கு வாகனத்தில் இருந்து கீழே இறக்கி அழைத்து சென்றனர்.
அப்போது அவர், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்தும், ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறியும் கோஷம் எழுப்பியபடி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அவரை போலீசார் ஜீப்பில் ஏற்றி விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
வெளியூர்காரருக்கு அனுமதி
இதுகுறித்து முகமது யாகூப் கூறியதாவது:-
பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகை, தொழில் வரிகளை செலுத்தி வந்தேன். இதற்கிடையே அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடை நடத்த அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து காந்தி விளையாட்டு மைதானம் அருகே கடை வைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால் அந்த இடத்திலும் வெளியூரை சேர்ந்த ஒருவருக்கு கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் எனது தள்ளுவண்டி கடையை அகற்றிவிட்டு புதிய கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தனக்கு கடை நடத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு ஒரு கடை அமைப்பதை நிறுத்த வேண்டும். நான் கடை அமைக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story