மண் அள்ளிய 3 லாரிகளை மடக்கி பிடித்த கிராம மக்கள்
மண் அள்ளிய 3 லாரிகளை கிராம மக்கள் மடக்கி பிடித்தனர்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே உள்ள பாளையங்கோட்டை கிராமத்தில் தனியார் கல்லூரி அருகே பொக்லைன் எந்திரம் மூலம் 3 டிப்பர் லாரிகளில் சிலர் செம்மண் அள்ளினர். இதில் காமன்பட்டி அருகே மண் அள்ளி வந்தபோது, டிப்பர் லாரி ஒன்றை கூலம்பட்டி கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். இதேபோல் மண் அள்ளி கொண்டிருந்த 2 லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தையும் கிராம மக்கள் மடக்கினர்.
இதுகுறித்து செம்பட்டி போலீசார் மற்றும் ஆத்தூர் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதனால் காலையில் இருந்து மதியம் வரை லாரியுடன் கிராம மக்கள் காத்திருந்தனர். நீண்டநேரத்துக்கு பிறகு போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் 3 டிப்பர் லாரிகளை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
ஆனால் சிறிதுநேரத்தில் அந்த லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் போலீஸ் நிலையத்தில் இருந்து மாயமாகி விட்டது. இது கிராம மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு கிராம மக்கள் புகார் அனுப்பினர். அதில் மண் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த சம்பவம் செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story