திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் சுவாமி, அம்பாள் வெள்ளி வாகனங்களில் வீதி உலா


திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் சுவாமி, அம்பாள் வெள்ளி வாகனங்களில் வீதி உலா
x
தினத்தந்தி 10 Feb 2022 8:21 PM IST (Updated: 10 Feb 2022 8:21 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா 4ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் வீதி உலா வந்தனர்

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா 4-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.
வெள்ளி யானை வாகனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 7-ந் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி சுவாமி, அம்பாள் காலையும், மாலையும் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். விழாவின் 4-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
காலை 7 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். மாலை 6.35 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து உள்மாட வீதி, ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
இன்று குடவருவாயில் தீபாரானை
மாசித் திருவிழாவின் 5-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய பின்னர், குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story