தி.மு.க.வின் மோசமான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயார் திண்டுக்கல்லில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


தி.மு.க.வின் மோசமான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயார்  திண்டுக்கல்லில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 10 Feb 2022 9:10 PM IST (Updated: 10 Feb 2022 9:10 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வின் மோசமான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டனர் என்று திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம், திண்டுக்கல் டி.எஸ்.எல்.திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதற்கு முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
பொய்யான வாக்குறுதிகள் 
தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். அதற்கு மக்கள் நலன்கருதி திட்டங்களை செயல்படுத்தியதே காரணம். ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அவர் மறைந்த பின்பும் நிறைவேற்றப்பட்டன. இதனால் 2021 சட்டசபை தேர்தலில் வென்று அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு சாதகமான சூழல் இருந்தது. ஆனால் தி.மு.க. 505 பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்துக்கு தான் முதல் கையெழுத்து என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதனால் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களிடம் தி.மு.க. வசமாக சிக்கி கொண்டது. கொரோனா 3-வது அலை பரவும் நிலையில் அதை பற்றி தி.மு.க. அரசு கவலைப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா காலத்தில் மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன. அ.தி.மு.க. தொண்டர்களும் மக்களுக்கு உதவினர். தற்போது தி.மு.க. தொண்டர்கள் யாராவது உதவி செய்கிறார்களா?
மக்களை சந்திக்காத அமைச்சர்கள் 
மேலும் பொங்கல் பண்டிகைக்கு அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கிய ரூ.2 ஆயிரத்து 500-ஐ கூட தி.மு.க. அரசு வழங்கவில்லை. அதோடு தரமற்ற பொருட்களை பொங்கல் பரிசாக வழங்கினர். அதில் பப்பாளி விதைகளை எதற்கு வழங்கினார்கள் என்றே தெரியவில்லை. வடமாநிலங்களில் இருந்து தரமற்ற பொருட்களை வாங்கி வந்து வழங்கியதை பெண்கள் கண்டுபிடித்து விட்டார்கள். தி.மு.க. அரசு, மக்களை பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. இன்னும் மீதமுள்ள 4 ஆண்டுகளில் எவ்வளவு சுருட்டலாம் என்று கணக்குபோடுகின்றனர்.
சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களால் மக்களை சந்திக்க முடியவில்லை. மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று தயங்கி வெளியே வரவில்லை. மு.க.ஸ்டாலின் விடியல் தரப்போவதாக கூறினார். தினமும் பொழுது விடிகிறது, ஆனால் மக்களுக்கு நல்ல விடியலாக அமையவில்லை.
இந்த நிர்வாக திறமை இல்லாத தி.மு.க. அரசை அகற்றுவதற்கு உள்ளாட்சி தேர்தல் நல்ல அடித்தளம் ஆகும். தி.மு.க.வின் மோசமான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டனர். மேலும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கவும் மக்கள் தயாராக உள்ளனர். எனவே இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க.வுக்கு வெற்றி தான். இதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உழைத்து வெற்றிக்கனியை பறிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story