வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 7 பேரிடம் ரூ.10½ லட்சம் மோசடி வாலிபர் கைது


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 7 பேரிடம் ரூ.10½ லட்சம் மோசடி வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2022 10:28 PM IST (Updated: 10 Feb 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 7 பேரிடம் ரூ.10½ லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கடலூர், 

 சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அருள்குமார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விளம்பரத்தில் தனியார் நிறுவனம் மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று இடம்பெற்றிருந்தது.


இதை பார்த்த நான், அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது, அதன் உரிமையாளர் தீபக் (வயது 35) மற்றும் அங்கு பணிபுரிந்த ஊழியர் பவதாரணி ஆகியோர் தாங்கள் பல நபர்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், பணம் கொடுத்தால் கண்டிப்பாக சிங்கப்பூரில் உள்ள நகைக்கடைக்கு விற்பனையாளர் வேலைக்கு அனுப்புவதாகவும் கூறினர்.

மோசடி

இதை நம்பிய நான் அவர்களிடம் ரூ.65 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

 விசாரணையில் அருள்குமார், மந்தாரக்குப்பத்தை சேர்ந்த அருண்குமார், சிதம்பரம் எஸ்.பி. கோவில் தெருவைச் சேர்ந்த சிவக்குமார், கிள்ளை சதீஷ்குமார், பெரியப்பட்டு வினோத்குமார், வாண்டயான்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன், பெராம்பட்டு பிரபு ஆகியோரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், ராதாவிளாகம் கிராமத்தை சேர்ந்த கற்பகவல்லி என்பவரிடம் அஞ்சல் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி தீபக், பவதாரணி ஆகியோர் மொத்தம் ரூ.10 லட்சத்து 55 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைது

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான போலீசார் தீபக்கை தேடி வந்தனர். 

இந்த நிலையில் தீபக், சென்னை திருமுல்லைவாயல் அருகே பொத்தூர் அருகில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சென்னை விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த தீபக்கை கைது செய்து, சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம், ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Next Story