7 சாமி சிலைகள் பதுக்கிய வழக்கில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி கைது


7 சாமி சிலைகள் பதுக்கிய வழக்கில்  ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி கைது
x
தினத்தந்தி 10 Feb 2022 11:30 PM IST (Updated: 10 Feb 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் 7 சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரத்தில் 7 சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

சிலைகள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி அலெக்சாண்டர்(வயது 52). இவர் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாகவும் ரூ.5 கோடி மதிப்பில் அதனை விற்க முயற்சி செய்வதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 3-ந் தேதி ராமநாதபுரம் வந்து கூரிச்சாத்த அய்யனார் கோவில் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 சாமி சிலைகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பா.ஜ.க. நிர்வாகி அலெக்சாண்டர் மற்றும் போலீஸ்காரர்களான இளங்குமரன், நாகநரேந்திரன் மற்றும் விருதுநகர் கருப்பசாமி, கணேசன் ஆகியோரை கைது செய்தனர். இந்த சிலை கடத்தல் சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்து வந்த ராமநாதபுரம் கூரிச்சாத்த அய்யனார் கோவில் பகுதியைச் சேர்ந்தவரும், ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் காய்கறி கடை நடத்தி வருபவருமான ராஜேஷ் (37) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ராஜேசை கைது செய்தனர். 

ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி

இவர் ராமநாதபுரம் ரஜினி ரசிகர் மன்ற இணைச் செயலாளராக இருந்து வருகிறார். கைது செய்யப்பட்ட ராஜேஷ் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து சிலைகளை மீட்டு, கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் துணை சூப்பிரண்டு மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகபூபதி, விஜயகுமார், கணேசன் உள்ளிட்ட தனிப்படையினரை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார்.

Next Story