திருவட்டார் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சாவு


திருவட்டார் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 10 Feb 2022 11:44 PM IST (Updated: 10 Feb 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவட்டார், 
திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்
வேர்க்கிளம்பி அருகே  உள்ள மாறாங்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜான் கிளாபட் (வயது 48), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை 9.45 மணிக்கு ஜான் கிளாபட் வேர்க்கிளம்பியில் இருந்து சாமியார்மடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
பிலாவிளை பகுதியை சென்றடைந்த போது சாமியார்மடத்தில் இருந்து வேர்க்கிளம்பி நோக்கி அதிக பாரம் ஏற்றி கொண்டு ஒரு டிப்பர் லாரி வந்தது. இந்த நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சக்கரத்தில் சிக்கி சாவு 
இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரத்தில் ஜான் கிளாபட் சிக்கி கொண்டார். இதனால் உடல் நசுங்கி அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். 
விபத்து ஏற்பட்டதும் டிப்பர் லாரி டிரைவரான குழித்துறையைச் சேர்ந்த பினோ பிரேம் (42) என்பவர் தப்பி ஓடி விட்டார்.
பொதுமக்கள் சாலை மறியல்
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். உடனே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுபற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்த னர். உடனே போராட்டக்காரர்கள் அவர்களை முற்றுகையிட்டு, விபத்து ஏற்பட்டது ஏன்? என்பது குறித்து ஆவேசமாக பேசினர்.
இந்த வழியாக அடிக்கடி கனரக வாகனங்கள் செல்கிறது. குவாரிகளில் இருந்து அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது என குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கனரக வாகனங்கள் வேறு வழியில் செல்ல முடியுமா? என பரிசீலிக்க அரசிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சோகம்
இதற்கிடையே ஜான் கிளாபட்டின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story