நாமக்கல் மண்டலத்தில் 8 கோடி முட்டைகள் தேக்கம்-கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் 8 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்து இருப்பதால், முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டது.
நாமக்கல்:
20 காசுகள் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் கொள்முதல் விலையை அதிரடியாக 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் முட்டை கொள்முதல் விலை 440 காசுகளாக சரிவடைந்தது.
கறிக்கோழி கிலோ ரூ.94-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.64-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
8 கோடி முட்டைகள் தேக்கம்
முட்டை விலை சரிவு குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
நாமக்கல் மண்டலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு தினமும் 50 முதல் 60 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக ஒரு லோடு கூட போகவில்லை. நாமக்கல் மண்டலத்தின் முட்டை கொள்முதல் விலையைவிட அங்கு 20 முதல் 30 காசுகள் வரை குறைவு. அந்த விலைக்கு நாம் முட்டைகளை அனுப்ப முடியாது.
மேலும் முட்டை உற்பத்தியும் தினமும் 50 லட்சம் வரை அதிகரித்து உள்ளது. அதன் காரணமாக பண்ணைகளில் 2 நாட்களில் உற்பத்தியான சுமார் 8 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் கொள்முதல் விலையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இல்லை எனில் வெளிமாநில முட்டைகள் தமிழகத்திற்கு விற்பனைக்கு வந்து விடும். இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை சீராகி, கொள்முதல் விலை உயரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 7-ந் தேதி முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story