குமாரபாளையம் நகராட்சியிலேயே வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்-வேட்பாளர்கள் கோரிக்கை
நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை குமாரபாளையத்திலேயே நடத்த வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குமாரபாளையம்:
கொரோனா தடுப்பு
குமாரபாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்பாடு மற்றும் தேர்தல் விதிமுறைகள் குறித்து வேட்பாளர்களுக்கு விளக்கும் கூட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் 183 வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளரும், நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருமான சசிகலா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தேர்தல் பிரசாரத்துக்கு வேட்பாளருடன் 20 நபர்கள் மட்டுமே வாக்கு சேகரிக்க செல்ல வேண்டும். உள் அரங்கத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.
குமாரபாளையத்தில் வாக்கு எண்ணிக்கை
அப்போது வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சசிகலா, குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய நகராட்சிகளில் பதிவாகும் ஓட்டுகளை எண்ண திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
அதற்கு வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தங்களுக்கு அங்கு போதிய பாதுகாப்பு இருக்காது, கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது குமாரபாளையத்தில் தான் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதேபோல் இந்த முறையும் குமாரபாளையம் நகராட்சியிலேயே வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையாளர் சசிகலா தெரிவித்தார்.
Related Tags :
Next Story