பதற்றமான வாக்குச்சாவடிகளைமண்டல அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளை மண்டல அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.
தர்மபுரி:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளை மண்டல அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.
ஆய்வுக் கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 11 ஒன்றிய பார்வையாளர்கள், 11 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 26 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 18 மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் பிருந்தாதேவி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:-
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், சி.சி.டி.வி. கேமரா, வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நகர்ப்புற அமைப்புகளில் தேர்தல் நடத்தை விதிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். இதேபோல் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் போதிய அளவில் இருக்கின்றனவா? என்பதை சரி பார்க்க வேண்டும்.
புகார்கள்
தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள தேதிகளில் பூத் சிலிப்புகளை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதையும், தபால் வாக்கு படிவங்களை உரியவர்களிடம் வழங்குவதையும் கண்காணிக்க வேண்டும். இதேபோல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் திவ்யதர்சினி பேசினார்.
ஆய்வுக் கூட்டத்தில் தர்மபுரி நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார், 10 பேரூராட்சிகளை சேர்ந்த செயல் அலுவலர்கள் உள்பட தேர்தல் பணியில் ஈடுபடும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தேர்தல் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடந்த போது எடுத்த படம்.அருகில் தேர்தல் பார்வையாளர் பிருந்தாதேவி, போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உள்ளனர்.
Related Tags :
Next Story