தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு


தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 10 Feb 2022 11:55 PM IST (Updated: 10 Feb 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு வென உயர்ந்தது. அதன்படி பிச்சிப்பூ கிலோ ரூ.2,500-க்கு விற்பனையானது.

ஆரல்வாய்மொழி, 
தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு வென உயர்ந்தது. அதன்படி பிச்சிப்பூ கிலோ ரூ.2,500-க்கு விற்பனையானது.
பூ மார்க்கெட்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அதன்படி கொடைக்கானல், ஊட்டி, சேலம், திண்டுக்கல், மதுரை, வாடிப்பட்டி, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்தும், குமரி மாவட்டத்தின் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி மற்றும் நெல்லை மாவட்டத்தில் காவல்கிணறு, ஆவரைக்குளம் ஆகிய பகுதியில் இருந்தும் இங்கு பூக்கள் கொண்டுவரப்படுகிறது.
அவ்வாறு கொண்டுவரப்படும் பூக்களை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருகை தந்து பூக்களை வாங்கிச் செல்வார்கள். மேலும், வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பிச்சி விலை உயர்வு
நேற்று முன்தினம் ரூ.1250-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.1250 உயர்ந்து ரூ.2500-க்கு விற்பனையானது. இதேபோல், ரூ.1000-க்கு விற்பனையான முல்லை ரூ.1300 உயர்ந்து ரூ.2300-க்கும், ரூ.400-க்கு விற்பனையான மல்லிகை ரூ.1000 உயர்ந்து ரூ.1400-க்கு விற்பனையானது.
இதுகுறித்து பூவியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில், இன்று(வெள்ளிக்கிழமை) தை மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. இதனால், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் விலை கிடுகிடுவன உயர்ந்தது என்றார். 
விலை விவரம்
மார்க்கெட்டில் விற்பனையான மற்ற பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-
அரளி ரூ.200, சம்பங்கி ரூ.500, கனகாம்பரம் ரூ.1200, வாடாமல்லி ரூ.80, துளசி ரூ.40, தாமரை ஒரு எண்ணம் ரூ.10, கோழிபூ ரூ.70, பச்சை (ஒரு கட்டு) ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.20, பட்டன் ரோஸ் ரூ.120, ஸ்டம்ப் ரோஸ் (ஒரு கட்டு) ரூ.450, மஞ்சள் கிரேந்தி ரூ.45, சிவப்புக்கிரேந்தி ரூ.65, சிவந்தி (மஞ்சள்) ரூ.200, சிவந்தி (வெள்ளை) ரூ.220, கொழுந்து ரூ.150, மரிக்கொழுந்து ரூ.130 என விற்பனையானது.

Next Story