19 குடும்பங்களை காலி செய்யக்கோரி நோட்டீஸ்


19 குடும்பங்களை காலி செய்யக்கோரி நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 Feb 2022 11:59 PM IST (Updated: 10 Feb 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே 19 குடும்பங்களை வனத்துறை காலி செய்ய கூறி வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியதால் பட்டா வழங்க வலியுறுத்தி தேசியக்கொடியுடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே 19 குடும்பங்களை வனத்துறை காலி செய்ய கூறி வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியதால் பட்டா வழங்க வலியுறுத்தி தேசியக்கொடியுடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வனத்துறைக்கு சொந்தமான இடம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் 3 தலைமுறைகளாக சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

அதில் 19 குடும்பங்கள் வசிக்கும் பகுதி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காப்புக் காடு பகுதியாக வனத்துறை அறிவித்துள்ளது. 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சோதனை சாவடி அருகில் உள்ள 19 குடும்பங்கள் காப்புக் காடு பகுதியில் உள்ளதாகவும் அதை உடனடியாக காலி செய்யும்படியும் வனத்துறை கூறியது. 

மின் இணைப்பு துண்டிப்பு

ஆனால் மலைகிராம மக்கள்
 காலி செய்யாமல் இருந்ததால் 19 வீடுகளின் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் எந்தவித பணிகளும் மேற்கொள்ள முடியாமலும் மிகவும் அவதிப்பட்டனர். 

இதனால், மலைகிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் திருப்பத்தூர் மாவட்டம் உதயமான பின்பு முன்னாள் கலெக்டர் சிவன்அருள் நடவடிக்கை மேற்கொண்டு மின் இணைப்பு மீண்டும் கிடைக்க வழிவகை செய்தார். மேலும் அந்த 19 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். பின்னர் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர் உண்ணாவிரதம்

அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் காப்பு காடு பகுதியில் உள்ளதாக கூறப்படும் 19 வீடுகளை 15 நாட்களுக்குள் காலி செய்து தரும்படியும், தவறும் பட்சத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வனத்துறை சார்பில் 19 வீடுகளிலும் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

இதை கண்டித்து பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களை சேர்ந்த மலைகிராம மக்கள் நோட்டீசை ரத்து செய்து பட்டா வழங்க வலியுறுத்தி தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியவாறு நேற்று காலை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது.

Next Story