வங்கி பெண் ஊழியர் தவறவிட்ட 19 பவுன் நகை
நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வங்கி பெண் தவறவிட்ட 19 பவுன் நகையை வாலிபர் போலீசில் ஒப்படைத்தார்.
ஜோலார்பேட்டை
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி அனுபமா (வயது 39). சென்னையில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வாடகை காரில் நாட்டறம்பள்ளி வழியாக பெங்களூரு சென்றுள்ளார். அப்போது அவர் நகை வாத்திருந்த பேக் ரோட்டில் தவறி விழுந்துள்ளது.
இந்த நேரத்தில் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் வெங்கடேசன் (22) தனது மோட்டார் சைக்கிளில் நாட்டறம்பள்ளி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
கேத்தாண்டப்பட்டி அருகே அருகே தேசிய நெடுஞ்சாலையில் லேடீஸ் பேக் கிடந்ததை எடுத்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதனை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் பேக்கை திறந்து பார்த்த போது அதில் ஆரம், நெக்லஸ் உள்ளிட்ட 19 பவுன் நகைகள், 20 வெள்ளி நாணயங்கள் இருந்தது.
அதில் இருந்த ரசீதில் இருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு போலிசார் பேசினர். அப்போது அனுபமா பேக்கை தவறவிட்டது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர் போலீஸ் நிலையத்திற்கு சென்று நகையை பெற்றுக்கொண்டார். போலீசார் வெங்கடேசனை பாராட்டினர்.
Related Tags :
Next Story