நாளை முதல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்க ஏற்பாடு


நாளை முதல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்க ஏற்பாடு
x
தினத்தந்தி 11 Feb 2022 12:07 AM IST (Updated: 11 Feb 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை முதல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம், 

விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகளில் உள்ள 102 நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளில் உள்ள 108 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஆக மொத்தம் 210 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 935 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.

மொத்த வாக்காளர்கள்

இத்தேர்தலுக்காக 346 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான, மிக பதற்றமான வாக்குச்சாவடிகளாக 50 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் மொத்தம் 1,42,022 ஆண் வாக்காளர்களும், 1,51,109 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 55 பேரும் ஆக மொத்தம் 2,93,186 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் தற்போது அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

பூத் சிலிப்

இந்நிலையில் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் பூத் சிலிப் அச்சடிக்கப்பட்டு அவை அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த பூத் சிலிப் வழங்கும் பணி நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்காளர்களுக்கு நேரடியாக பூத் சிலிப் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வார்டு, வாரியாகவும், தெரு வாரியாகவும் பூத் சிலிப்புகள் பிரிக்கப்பட்டு தயார் செய்யும் பணிகளில் நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நாளை முதல் வழங்கப்படும்

இவை நாளை முதல் வீடு, வீடாக சென்று வழங்கப்படும். பூத் சிலிப் வாங்காமல் விடுபட்டவர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிக்கு அருகே பூத் சிலிப் வினியோகம் செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 
விழுப்புரம் நகராட்சியில் பூத் சிலிப்புகளை வார்டு வாரியாக பிரித்து தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்திரஷா மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டனர். 

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 3 நகராட்சிகள், சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், மணலூர்பேட்டை, வடக்கனந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளில் வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்குவதற்கான பணிகள் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற்று வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பூத்சிலிப்பை  வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குமரன் வழங்கினார்.  இந்த பூத் சிலிப்கள் நாளை முதல் வாக்காளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

Next Story