வாக்குச்சாவடி அலுவலர்கள் எந்த கட்சிக்கும் சாதகமாக செயல்படக் கூடாது. தேர்தல் பொது பார்வையாளர் அறிவுரை


வாக்குச்சாவடி அலுவலர்கள் எந்த  கட்சிக்கும் சாதகமாக செயல்படக் கூடாது. தேர்தல் பொது பார்வையாளர் அறிவுரை
x
தினத்தந்தி 11 Feb 2022 12:07 AM IST (Updated: 11 Feb 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி அலுவலர்கள் எந்த கட்சிக்கும் சாதகமாக செயல்படக்கூடாது என்று தேர்தல் பொது பார்வையாளர் கூறினார்.

ராணிப்பேட்டை

வாக்குச்சாவடி அலுவலர்கள் எந்த கட்சிக்கும் சாதகமாக செயல்படக்கூடாது என்று தேர்தல் பொது பார்வையாளர் கூறினார்.

2-ம் கட்ட பயிற்சி

ராணிப்பேட்டை எல்.எப்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரி, ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரி, சோளிங்கர் அரசு மேல்    நிலைப்பள்ளி மற்றும் அரக்கோணம் சி.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது தேர்தல் பொது பார்வையாளர் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கான பணிகளை எவ்வித பிரச்சினைகள் ஏற்படாமலும், சலசலப்புக்கு இடமளிக்காத வகையிலும் செயல்பட இப்பயிற்சி வகுப்பில் அனைத்து தகவல்களையும் முறையாக தெரிந்து கொள்ள வேண்டும். 

செல்பி எடுக்கக்கூடாது

வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் படிவங்களை எவ்வித தவறும் ஏற்படாத வண்ணம் பூர்த்தி செய்வதை தெரிந்து கொள்ள வேண்டும். வாக்களிக்க தெரியாத நபர்கள் எவரேனும் வாக்களிக்க உதவி செய்யுமாறு கேட்கும்போது, அவர்களை வெளியில் ஒட்டப்பட்டுள்ள வாக்களிப்பது எப்படி என்பதற்கான படிவத்தினை பார்த்து தெரிந்து கொள்ளும்படி தெரிவிக்க வேண்டும்.

வாக்காளர்களுக்கு எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட பட்டனை அழுத்துங்கள் என தெரிவிக்க கூடாது. வாக்குப்பதிவின் போது அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தின் அருகில் சென்று ஏதேனும் பிரச்சினையை சரிசெய்யும் போது அங்குள்ள ஏஜெண்டை அருகில் வைத்துக்கொண்டு அப்பணியைச் செய்ய வேண்டும். செல்போனில் வாக்குப்பதிவை பதிவு செய்வதையும், செல்பி எடுப்பதையும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும்.

சாதகமாக செயல்படக்கூடாது

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு எந்திரத்தில் பூஜ்ஜியம் காட்டுகிறதா என்பதை பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் காண்பிக்க வேண்டும். வாக்குப்பதிவின் போது மாலை 5 மணிக்குப் பிறகு வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கிட வேண்டும். கொரோனா பாதித்த வாக்காளர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. விதி முறைகளை கடைபிடித்து அவர்கள் வாக்களிப்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். எந்த ஒரு நபருக்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாக செயல்படாமல், நடுநிலையுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏகராஜ், பரந்தாமன், லதா, வருவாய் கோட்டாட்சியர் சிவதாசு, தாசில்தார்கள் பழனிராஜன், செந்தில்குமார் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story