வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். வேலூர் கலெக்டர் அறிவுறுத்தல்


வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். வேலூர் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 11 Feb 2022 12:08 AM IST (Updated: 11 Feb 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வேலூரில் நடந்த 2-ம் கட்ட பயிற்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

வேலூர்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வேலூரில் நடந்த 2-ம் கட்ட பயிற்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

2-ம் கட்ட பயிற்சி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் 178 வார்டுகளுக்கு 819 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தலில் 628 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தலில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என்று மொத்தம் 3,101 பேர் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு கடந்த மாதம் 31-ந் தேதி முதற்கட்ட பயிற்சி நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று 2-ம் கட்ட பயிற்சி 7 இடங்களில் நடந்தது. வேலூர் மாநகராட்சி தேர்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதனை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த...

வாக்குச்சாவடி அலுவலர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். மாதிரி வாக்குப்பதிவை சரியான முறையில் பதிவிட்டு அழித்தல், வாக்குப்பதிவு முடிந்த பின்னர் எந்திரத்தை சீல் வைத்தல் உள்ளிட்ட பணிகளை முறையாக கையாள வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் தபால் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். தபால் வாக்கு அளிப்பதற்கான விண்ணப்பங்களை வருகிற 16-ந் தேதிக்குள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும்.

தேர்தலில் பணிபுரியும் அலுவலர்கள் வேறுமாவட்டங்களில் இருந்தாலும் அவர்கள் தபால் வாக்குகள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வசிக்கும் இடங்கள், வாக்குரிமை எங்கு உள்ளது என்பது குறித்து விவரங்களை சேகரிக்க வேண்டும். தேர்தலில் பணிபுரியும் அனைவருக்கும் தபால் வாக்கு அளிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளுவது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தார். அப்போது மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப், வேலூர் மாநகராட்சி தேர்தல் கண்காணிப்பாளர் அஜய்சீனிவாசன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுதா, வசந்தி, இளநிலைபொறியாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story