குடியாத்தத்தில் பட்டா வழங்கப்பட்ட வீட்டு மனையை அளந்து வழங்கக் கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்


குடியாத்தத்தில் பட்டா வழங்கப்பட்ட வீட்டு மனையை அளந்து வழங்கக் கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2022 12:08 AM IST (Updated: 11 Feb 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்து வழங்காததால் தாலுகா அலுவலகம் முன்பு தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியாத்தம்

குடியாத்தத்தில் பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்து வழங்காததால் தாலுகா அலுவலகம் முன்பு தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

232 பேருக்கு பட்டா

வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன் பிச்சனூர் ஆர்.எஸ்.நகர், முனிசிபல் லைன், ஆசிரியர்காலனி, ராமலிங்கம் நகர், அசோக் நகர் ஆகிய பகுதியில் வசித்து வந்த பட்டியல் இன மக்கள் 232 பேருக்கு கடந்த 2018-ம் ஆண்டு குடியாத்தம் தாலுகா கொண்ட சமுத்திரம் ஊராட்சி காந்திநகர் கல்லேரி பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வீட்டுமனை பட்டா பெற்ற பெரும்பாலோனோர் தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பகுதியில் குடிசைகள் அமைக்கலாம் என சில தினங்களுக்கு முன்பு அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது, சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த நில உரிமையாளர் இங்கே ஏதும் வீட்டுமனை பட்டா வழங்க வில்லை என கூறியதாக கூறப்படுகிறது.

போராட்டம்

இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டுமனை பெற்ற 232 பட்டியல் இன மக்களும் 4 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கிய இடத்தை அளந்து பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும்,, அந்த இடத்தை வேறு நபர் உரிமை கொண்டாடுவதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வருவாய்த் துறையினரிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பயனாளிகளுடன் இந்திய குடியரசு கட்சியினர் நேற்று காலையில் குடியாத்தம் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் வீட்டுமனையை அளந்து கல் நட்டு தராததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்துவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய குடியரசு கட்சியின் வேலூர் மாவட்ட இணை செயலாளர் சாமுபுஷ்பராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சி வேலூர் மாவட்ட தலைவர் தலித்குமார் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் தென்காந்தி, துணைத்தலைவர் வீரேந்தர்,  இளைஞரணி செயலாளர் சோமு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பயனாளிகள் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்தனர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார்கள் லலிதா, கலைவாணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஓரிரு தினங்களில் பட்டா வழங்கிய இடம் அளந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story