வேலூர் மாநகராட்சி தேர்தலையொட்டி போலீசார் துப்பாக்கியுடன் கொடி அணிவகுப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேலூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதனை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தொடங்கி வைத்தார்.
வேலூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேலூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதனை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தொடங்கி வைத்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுகத்தூர், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருவலம் பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 178 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 819 பேர் போட்டியிடுகிறார்கள். 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் 5,23,176 பேர் வாக்களிக்க உள்ளனர்.
அவர்களுக்காக 528 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 2 கண்காணிப்பு கேமராக்களும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப்கேமராவும் பொருத்தப்பட உள்ளது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தினத்தன்று 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கொடி அணிவகுப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு அச்சமின்றி சென்று வாக்களிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் வேலூரில் நேற்று கொடி அணிவகுப்பு நடந்தது. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இருந்து புறப்பட்ட அணிவகுப்பை வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை முருகன் கோவில், பி.டி.சி.சாலை வழியாக ஓல்டுடவுன் வரை அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், முத்துகுமார் மற்றும் போலீசார், ஆயுதப்படை போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story